கேரளாவில் பாராசெயிலிங் என்பது கடல், செங்குத்தான பாறைக் குன்றுகள், பரந்து விரிந்த மணல் கடற்கரைகள் ஆகியவற்றைத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட சாகசங்களுடன் இணைக்கின்ற ஒரு கனவுப் பயணம் ஆகும். கோவளத்தின் ஹவா கடற்கரையில் வின்ச் படகுகள், சான்றளிக்கப்பட்ட உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தனது முதல் அதிகாரப்பூர்வ பாராசெயிலிங் திட்டத்தைத் தொடங்கியதன் மூலம் அரபிக் கடலின் கண்கவர் காட்சியை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதில் மாநில அரசு ஓர் அடி முன்னெடுத்து வைத்தது.
இப்பொழுது, அங்கீகரிக்கப்பட்ட சாகச சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் கோவளம், வர்க்கலா, செராய் போன்ற கடற்கரைகளை பாராசெயிலிங் மற்றும் ஸ்கூபா டைவிங் செய்வதற்கான முக்கிய இடங்களாகக் கேரளா சுற்றுலாத் துறை அங்கீகரித்துள்ளது.
அத்துடன், கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முழப்பிலங்காடு, பய்யாம்பலம் போன்ற கேரளாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரங்கள் நன்கு நிறுவப்பட்ட பாராசெயிலிங் மையங்களாக அங்கீகரிக்கப்பட்டதுடன், பாராகிளைடிங் மற்றும் மைக்ரோலைட் விமானங்கள் உள்ளிட்ட பிற வான்வழி நடவடிக்கைகளுக்கும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இருக்கின்றன.
கடற்கரையின் அமைவிடத்தைப் பொறுத்து பாராசெயிலிங் பயணம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும். அதே நேரத்தில் அறிவுறுத்தல்கள், படகுச் சவாரி உட்பட, இந்தச் செயல்பாட்டுக்கான மொத்த நேரம் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும். கேரளாவில் பாராசெயிலிங் மேற்கொள்வதற்கு உகந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை ஆகும். ஆனால் பருவமழைக் காலத்திலோ அல்லது பலத்த காற்று வீசும் நாளிலோ நீங்கள் அங்குச் சென்றால், உங்களை ஓய்வெடுக்குமாறு அல்லது உங்கள் செயல்பாட்டை ஒத்திவைக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துவோம். ஏனெனில் அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் அது சாகச விளையாட்டுகளுக்கு உகந்ததாக இருக்காது.
நீங்கள் பாராசெயிலிங்கிற்குப் புதியவர் என்றால், இருவர் செல்லும் பாராசெயிலிங் முறையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது; மேலும், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், நீங்கள் முன்கூட்டியே ஆபரேட்டரிடம் தெரிவிக்க வேண்டும்.
பாராசெயிலிங் பறத்தல் கடலின் நிலைமைகளையும், காற்றின் நிலைமைகளையும் சார்ந்தது. பாராசெயிலிங் பறத்தல் கடைசி நேரத்தில் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்பதை ஏற்றுக்கொள்ள நீங்கள் எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
பாதுகாப்புப் பட்டை, புறப்பாடு, தரையிறங்குதல் ஆகியவை பற்றிய அறிவுறுத்தல்களை நீங்கள் உன்னிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஏனெனில் இந்த நடவடிக்கைகள் உங்கள் பாதுகாப்புக்காகவும் வசதிக்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
விரைவில் உலரக்கூடிய, வசதியான ஆடைகளை அணிவதும், நல்ல ஷூக்கள் அணிவதும் நல்லது, தளர்வாகத் தொங்கும் அணிகலன்களை அணியக் கூடாது. அந்த இடத்தில் உயிர்க்காப்பு மேலங்கி, பாதுகாப்புப் பட்டை ஆகியவை உங்களுக்கு வழங்கப்படும்.
கேரள சுற்றுலாத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏற்பாட்டாளர்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கவும். முறையான உயிர்க்காப்பு மேலங்கிகள், வின்ச் படகுகள், பயிற்சிபெற்ற பணியாளர்கள் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்யவும்.