கேரளாவின் கடற்கரையில் மென்மையான அலைகள் தவழ்ந்து விளையாடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் ஓர் அலைச்சறுக்கு வீரர் அதன் மீது சறுக்கிச் செல்லும்போது அதை நின்று பார்க்கத் தோன்றுகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இதன் வடிவம் இன்னும் முழுமை பெறவில்லை என்றாலும், இது மெல்ல மெல்ல கடற்கரையின் ஒரு பகுதியாக மாறி வருகின்றது.


அதிகக் கும்பலான அலைச்சறுக்கு இடங்களைப் போல் அல்லாமல், கேரளாவில் உள்ள பல கடற்கரைகள் மிகவும் நிம்மதியான சூழலை வழங்குகின்றன. ஆரம்பநிலையாளர்கள் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளலாம், அதே நேரம் அனுபவமிக்க அலைச்சறுக்கு வீரர்கள் நீண்ட நேரத்திற்குத் தடையற்ற அலைச்சறுக்குப் பயணங்களை அனுபவிக்கலாம். செங்குத்தான பாறைக் குன்றுகள் நிறைந்த கடற்கரைகள், அமைதியான நதி முகத்துவாரங்கள் என இப் பகுதியின் கடற்கரையே பலதரப்பட்ட அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றது. இங்குள்ள மணற்பாங்கான தரைப்பகுதி குறிப்பாக பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில் மென்மையான, மிகவும் சமாளிக்கக்கூடிய அலைகளை உருவாக்குகிறது.


தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள், ஃபோம் போர்டுகள், கட்டமைக்கப்பட்ட பாடங்கள் ஆகியவற்றின் மூலம், முதல்முறையாக ஈடுபடுபவர்கள் விரைவாகச் சமநிலை பெற்று தங்கள் முதல் சவாரியின் உற்சாகத்தை அனுபவிக்க முடியும். மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அலைச்சறுக்குப் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.


பெரும்பாலான அலைச்சறுக்கு நடவடிக்கைகள் வர்க்கலா, கோவளம், வட கேரளாவின் சில கடற்கரைகள் ஆகிய இடங்களில் மட்டுமே நிகழ்த்தப்படுகின்றன. இந்த இடங்கள் நிலையான அலைகளையும், எளிதான நுழைவுப் பகுதிகளையும், கணிசமான எண்ணிக்கையிலான அலைச்சறுக்குப் பள்ளிகளையும் கஃபேக்களையும் கொண்டிருப்பதால் இந்த இடங்களில் அலைச்சறுக்கு வீரர்களின் வசதியும் பாதுகாப்பும் உத்தரவாதமளிக்கப்படுகின்றன என்பதால், இவை நிம்மதியான அலைச்சறுக்கு நகரச் சூழலை உருவாக்குகின்றன. காலையிலும், அந்தி நேரங்களிலும் வழக்கமாகக் காற்று அமைதியாக வீசுவதாலும், சாதகமான நிலைமைகள் நிலவுவதாலும் பெரும்பாலும் அந்த நேரங்களே அலைச்சறுக்குப் பயிற்சிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நீங்கள் அதை ஒருமுறை மேற்கொள்வதாக இருந்தாலும் அல்லது அலைச்சறுக்கு முகாமில் பதிவு செய்தாலும், பாதுகாப்பு, படிப்படியான பயிற்சி, கடலின் மீதான அன்பு ஆகியவை மட்டுமே நாம் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்களாக இருக்க வேண்டும்.


கேரளாவில் அலைச்சறுக்கு செய்வதற்கான முக்கியப் பருவம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை, அதாவது, தென்மேற்குப் பருவமழைக்குப் பிந்தைய காலம் ஆகும். அந்தப் பருவத்தில் கடல் வழக்கமாக அமைதியாகவும், அலைச்சறுக்குக்குப் பொருத்தமானதாகவும் காணப்படும், அலைகளின் உயரம் மிக அதிகமாக இருக்காது, புலப்பாடு நன்றாக இருக்கும். கொந்தளிப்பான கடல், வலிமை வாய்ந்த நீரோட்டங்கள், நிலையற்ற வானிலை ஆகியவற்றின் காரணமாக பருவமழை மாதங்கள் அலைச்சறுக்குப் பயிற்சிகளுக்கு ஏற்புடையவை அல்ல. புகழ்பெற்ற அலைச்சறுக்குப் பள்ளிகள் சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர்கள், பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், ஒவ்வோர் அமர்வுக்கு முன்னரும் மேற்கொள்ளப்படும் முறையான உபகரணப் பரிசோதனைகள் ஆகியவற்றுடன் செயல்படுவதால் ஆழம் குறைந்த, கண்காணிக்கப்படும் பகுதிகளில் நீச்சல் தெரியாதவர்கள் கூட இந்த அனுபவத்தை அணுகக்கூடியதாக இவை மாற்றுகின்றன.


பெரும்பாலான சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான ‘அலைச்சறுக்கு செய்யக் கற்றல்’ அமர்வுகளையும், பல நாட்கள் கொண்ட பாடநெறிகளையும், இடைநிலை அலைச்சறுக்கு வீரர்களுக்கான வழிகாட்டப்பட்ட பயிற்சி அமர்வுகளையும் வழங்குகின்றனர். வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மக்கள் வருகை அதிகமுள்ள பருவம் ஆகிய காலங்களில், முன்கூட்டியே ஓர் இடத்தை முன்பதிவு செய்வது நிச்சயமான நன்மை பயக்கும். மேலும், நீண்ட அமர்வுகள் அல்லது அலைச்சறுக்கு முகாம்களைப் பொறுத்தவரை, நீங்கள் அடிப்படை உடல்தகுதி பெற்றிருப்பதையும், உங்களிடம் மருத்துவச் சான்று இருப்பதையும் காட்டுமாறு நீங்கள் கேட்கப்படலாம். கடல் பாதுகாப்பாக இருப்பதாகப் பயிற்றுநர்கள் கருதும்போது மட்டுமே அலைச்சறுக்கு மேற்கொள்ளப்படுகிறது. ஓதம் மற்றும் காற்று ஆகியவற்றைப் பொறுத்து நேரங்கள் மாறுபடலாம்.


குறிப்புகள்

பாதுகாப்பு

எல்லாவற்றுக்கும் மேலாக, கொடி அமைப்புகள், காயல் நீரோட்டங்கள், பாதுகாப்பான முறையில் கீழிறங்குதல் ஆகியவற்றைப் பற்றி உங்கள் பயிற்றுநர் விளக்கம் அளிக்கும்போது அதைக் கூர்ந்து கவனித்துப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாட்டாளர்களைப் பயன்படுத்தவும்

தொழில்முறைப் பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் இருப்பதையும், உபகரணங்கள் உயர்தரம் வாய்ந்தவையாக இருப்பதையும் உறுதிசெய்ய, கேரள சுற்றுலாத் துறையால் அனுமதிக்கப்பட்டுள்ள அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ள அலைச்சறுக்குப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் நிலையைப் பொருத்தவும்

நீரில் உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை உள்ளது என்பதையும், உங்களுடைய முந்தைய அலைச்சறுக்கு அனுபவத்தையும் பொறுத்து, ஆரம்பநிலையாளர் பயிற்சிகளையோ அல்லது மேம்பட்ட அமர்வுகளையோ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

முன்கூட்டியே திட்டமிடவும்

வார இறுதி நாட்களிலும், மக்கள் வருகை அதிகமுள்ள பருவத்திலும் இடம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்; எனவே, நீங்கள் உங்கள் இடத்துக்கு முன்பதிவு செய்து, ஒரு நாள் முன்னதாக உங்கள் நேரத்தை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.