கேரளா சுமார் 580 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆயினும், ஸ்கூபா டைவிங் செய்ய கரைகளின் நீளம் ஒரு பொருட்டல்ல. இது, அலைகளுக்கு அடியில் என்ன காத்திருக்கிறது என்பதைப் பற்றியதாகும். பரிச்சயமான அலை ஓசைகளுக்கு அப்பால் அங்கே மற்றொரு உலகம் உள்ளது – அது அமைதியான, நிதானமான, கணிக்க முடியாத தன்மை கொண்ட உலகம் ஆகும். மீன் கூட்டங்கள் ஒரே சீராக நகர்கின்றன. பாறைகள் கடற்படுகையில் இருந்து மேலெழுந்து நிற்கின்றன. பவளம் தொகுப்புகளாகக் காணப்படுகின்றது. சில நேரங்களில், ஆமையோ அல்லது ஜெல்லி மீனோ இவற்றுக்கு இடையே நிதானமாகக் கடந்து செல்கின்றது.
அது உண்மையிலேயே நம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அது கண்கவர் காட்சியாக மட்டுமல்லாமல் எதிர்பாராத சந்திப்பாகவும் திகழ்கிறது. ஆழ்கடலில் முக்குளிக்கும்போது அது வெளிப்படுத்தும் விஷயங்கள் கணிக்க முடியாதவை. அது தான் சாகசம்.
கடற்கரையில் ஒரு சில இடங்களில் ஸ்கூபா டைவிங் செயல்பாடுகள் இருந்தாலும், திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகியவை இதற்குப் புகழ்பெற்ற தலங்கள் ஆகும். திருவனந்தபுரத்தில் கோவளம், வர்க்கலா ஆகிய இடங்கள் திறந்தவெளி கடல் தலங்களுக்குப் புகழ்பெற்றவை. அதே நேரம், கொச்சியில் உள்ள கடவந்தரா, கலூர் ஆகியவை அதிகக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட இடங்களை வழங்குகின்றன. கடமக்குடி தீவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஸ்கூபா டைவிங் பிரபலமாக உள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளும் மாறுபடுகின்றன. உதாரணமாக, கோவளத்தில் நாம் முக்குளிக்கும்போது பவளப்பாறை மீன் கூட்டங்கள், நீருக்கடியில் உள்ள பாறைப் பள்ளத்தாக்குகள், மணற்படுகைகள் ஆகியவற்றை நாம் காண முடியும். அதே நேரத்தில், வர்க்கலாவுக்கு அருகில் உள்ள இடங்கள் பல ஆண்டுகளாக அலைகளால் உருவாக்கப்பட்ட இயற்கையான கடல் வடிவமைப்புகளின் காட்சியை வழங்குகின்றன. கடற்கரை சார்ந்த புவியியல் அமைப்பைக் கொண்ட கொச்சியின் கடற்பகுதிகள் தனித்துவமான முக்குளிப்புச் சூழ்நிலையை வழங்குகின்றன.
ஆழம், நிலவமைப்பு, காண்புநிலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வோர் இடமும் வித்தியாசமான நீரடிப் பின்னணியை வழங்குகிறது.
முக்குளிப்புப் பருவம் பொதுவாக பருவமழைக் காலம் முடிந்த பின் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்தக் காலத்தின்போது, கடல் ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கின்றது, நிலையான சூழ்நிலைகளும் மேம்பட்ட காண்புநிலையும் காணப்படுகின்றன. கொந்தளிப்பான கடல், வலுவான நீரோட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக பருவமழைக் காலங்களின்போது முக்குளிப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
கேரளாவில் உள்ள பெரும்பாலான முக்குளிப்புச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் முதன்முறையாக முக்குளிப்பில் ஈடுபடுபவர்களுக்கு அறிமுக “முக்குளிப்பு முயற்சிகளை” வழங்குவதோடு, உரிமம் பெற்ற முக்குளிப்போருக்கான மேம்பட்ட முக்குளிப்புகளையும் வழங்குகின்றன. இந்தச் செயல்பாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா மற்றும் கடலோர ஆணையங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நீங்கள் ஆழமாக முக்குளிக்கவோ அல்லது மேம்பட்ட முக்குளிப்புப் பயிற்சிகள் எடுக்கவோ திட்டமிட்டிருந்தால், நீங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்வதும் மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பதும் அவசியமானதாக இருக்கலாம். அத்துடன், கடல் அமைதியாக இருக்கும்போது மட்டுமே முக்குளிப்புகளை மேற்கொள்ள முடியும்.
உங்கள் வசதிக்கும் அனுபவ நிலைக்கும் பொருந்தக்கூடிய முக்குளிப்பு ஆழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
முன்கூட்டியே திட்டமிடவும், ஏனெனில் சில முக்குளிப்புகளுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டியிருக்கலாம் அல்லது மருத்துவத் தடையின்மைச் சான்றிதழ் தேவைப்படலாம்.
சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர்களால் வழங்கப்படும் அனைத்துக் கட்டாயப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றவும்.
பாதுகாப்பையும் உபகரணங்களின் தரத்தையும் உறுதிப்படுத்த எப்பொழுதும் கேரள சுற்றுலாத் துறையால் அனுமதிக்கப்பட்ட மையங்கள் மூலம் மட்டுமே முக்குளிப்பை மேற்கொள்ளவும்.