நீண்ட கடல்சார் வரலாற்றைக் கொண்டுள்ள கொச்சி, கேரளாவின் துடிப்பான ஸ்கூபா டைவிங் தலங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகின்றது. இங்குள்ள கடலோர நீர்நிலைகள் துறைமுக முக்குளித்தல்கள், திறந்த கடல் அனுபவங்கள், அவ்வப்போது காணப்படும் கப்பல் சிதைவுத் தளங்கள் ஆகியவற்றின் கலவையான ஓர் அனுபவத்தை வழங்குவதன் மூலம் முக்குளிப்பு மேற்கொள்வோருக்கு பலவகைப்பட்ட நீருக்கடியிலான சூழலை உருவாக்குகின்றன.
கொச்சியில் முக்குளிப்பு நடவடிக்கைகள் பொதுவாக பெருநிலப்பகுதியிலும், அருகிலுள்ள தீவுப் பகுதிகளிலும் செயல்படும் பயிற்சி பெற்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இப்பகுதி அறிமுக முக்குளித்தல்களுக்கும், சான்றிதழ் பயிற்சிகள் உள்ளிட்ட நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. ஆரம்பநிலையாளர்களுக்கு, அவர்களைத் திறந்த நீர்நிலைத் தலங்களுக்கு அனுப்புவதற்கு முன் தொடக்க அமர்வுகளும், “பரிசோதனை முக்குளித்தல்களும்” பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் நடத்தப்படுகின்றன. ஆழமற்ற கடலோரப் பகுதிகள் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்ற அதே நேரத்தில், ஆழமான இடங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பல் சிதைவுத் தளங்களும் அனுபவமிக்க முக்குளிப்போருக்குப் பொருத்தமானதாக உள்ளன.
கடற்கரையை மையமாகக் கொண்ட முக்குளிப்புத் தலங்களைப் போல் அல்லாமல், கொச்சியின் நீருக்கடியிலான சூழல் அதன் கடலோரப் புவியியல் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. முக்குளிப்போர் செயற்கைப் பவளப்பாறை அமைப்புகள், பாறைப் பகுதிகள், சில இடங்களில் மூழ்கிய கப்பல்களின் சிதைந்த பாகங்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம். கடல்வாழ் உயிரினங்களில், சூழல் மற்றும் இடத்தைப் பொறுத்து சேவல்கோழி மீன், களவாமீன்கள், ஈல் போன்ற இனங்கள் அடங்கும்.
முக்குளிப்புப் பருவம் பொதுவாகக் கடல் அமைதியாகவும் நீர் தெளிவாகவும் இருக்கின்ற மாதங்களாகிய அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை மாதங்களின்போது, மோசமான நிலைமைகள் காரணமாகவும், கடல்நீர் தெளிவாக இருக்காது என்பதாலும் முக்குளித்தல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், வழங்கப்பட்ட உபகரணங்கள் மூலம், சான்றளிக்கப்பட்ட பயிற்றுநர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்து முக்குளிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆரம்பநிலையாளர்களுக்கு அறிமுக முக்குளிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதே நேரத்தில் சான்றளிக்கப்பட்ட முக்குளிப்போர் அதிக மேம்பட்ட அனுபவங்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
கொச்சியைத் தனித்துவமாகக் காட்டுவது அதன் முக்குளிப்புச் சூழலில் தன்மையே ஆகும். இது காட்சித் தெளிவை விட பலதரப்பட்ட அனுபவங்களை வழங்குவதிலேயே அதிகக் கவனம் செலுத்துகிறது. அதிகச் செயல்பாட்டில் உள்ள கடற்கரைப் பகுதியில் பயிற்சி, ஆய்வு, பன்முகத்தன்மை கொண்ட இடம் ஆகியவற்றின் கலவையை இது வழங்குகிறது.
திறந்தநிலை, கட்டுப்படுத்தப்பட்ட ஸ்கூபா டைவிங் வாய்ப்புகளைக் கொச்சி வழங்குகிறது. ஒரு குளம் அல்லது சோதனை முக்குளிப்பு, திறந்தநிலை நீரில் மேற்கொள்ளப்படும் பொழுதுபோக்கு முக்குளிப்பு அல்லது முழுமையான PADI/SSI பயிற்சி இவற்றில் எதற்கு நீங்கள் முன்பதிவு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது சிறந்தது.
படகு இருக்கும் இடம், அங்கு வந்து சேரவேண்டிய நேரம் ஆகியவற்றை உங்கள் சுற்றுலா ஏற்பாட்டாளருடன் குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாகவே உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
உங்களுக்குக் கடற்குமட்டல் கோளாறு உள்ளது என்றால், பயணத்தின்போது ஏற்படும் குமட்டலுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை உங்களுடன் எடுத்துச் செல்லவும்.
குளம் / அறிமுகப் பயிற்சிகள் சுமார் 1.5-3 மணிநேரம். திறந்த நீர்நிலைப் பயணங்கள் பொதுவாக அரை நாள் கால அளவு கொண்டவை, இதில் இடமாற்றங்கள், நீருக்கு வெளியே செலவிடும் நேரங்கள் ஆகியவையும் அடங்கும்.
குளம் / சோதனை முக்குளிப்புகளுக்கு எளிதானது. திறந்த நீர்நிலை மற்றும் கப்பல் சிதைவுப் பகுதி முக்குளிப்பு ஆகியவற்றுக்கு மிதமானது.
முதன்மையாக அக்டோபர் முதல் மார்ச் வரை; ஆயினும், கடலின் நிலைமை நன்றாக இருந்தால் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பிற மாதங்களில் பயணங்களைத் திட்டமிடலாம்.
கொச்சியில் திறந்த நீர்நிலை முக்குளித்தல்களுக்குக் கட்டணமாக, ஒரு தரநிலை முக்குளித்தலுக்கு வழக்கமாக 7,500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரம், குறுகிய “சோதனை ஸ்கூபா” அல்லது நீச்சல் குள அமர்வுகளுக்குக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும், இதற்குப் பெரும்பாலும் 4,500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.
பேருந்து மூலம்: கொச்சி நகரத்துக்கு பேருந்துகள், மெட்ரோ, டாக்சிகள் மூலம் எளிதில் செல்ல முடியும். முக்குளிப்பு மையங்கள் பொதுவாக கடவந்தராவிலோ அல்லது விளையாட்டரங்கம் / காயல் பகுதிக்கு அருகிலோ அமைந்துள்ளன; முன்பதிவு செய்த பிறகு சந்திப்பு மையங்கள் எவை என்பது குறித்த துல்லியமான தகவல் அளிக்கப்படும்.
விமானம் மூலம்: கொச்சி சர்வதேச விமான நிலையம் (நெடும்பாச்சேரி), மத்திய கொச்சியில் இருந்து சுமார் 30-35 கி.மீ.
இரயில் மூலம்: எர்ணாகுளம் சந்திப்பு (தெற்கு/சவுத்), எர்ணாகுளம் நகரம் (வடக்கு/நோர்த்) ஆகியவை முக்கிய இரயில் நிலையங்கள் ஆகும்.