பல்வேறு செல்வாக்கு மிக்க நபர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்ட ஸ்ரீ நாராயண குரு, அந்தச் சந்திப்புகளின்போது பொறுமையாகவும், புரிதலுடனும் தனது போதனைகளைப் பரப்பினார். அவர் எப்பொழுதும் மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்க ஆர்வமாக இருந்தார், தனது கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்க ஒருபோதும் முயற்சித்ததில்லை. இந்தக் கலந்துரையாடல்களில் சமஸ்கிருதத்திலும் ஆயுர்வேதத்திலும் அவருக்கு இருந்த அறிவுப்புலமை, அவரது கூர்மையான புத்திசாலித்தனம், உற்றுநோக்கும் திறன்கள் ஆகியவை தெளிவாக வெளிப்பட்டன. அதிகமாகக் கேட்பதும் குறைவாகப் பேசுவதும் அவர் பின்பற்றிய முக்கியக் கொள்கையாக இருந்தது. குரு மாபெரும் மனிதர்கள் பலரைச் சந்தித்தார், மகாத்மா காந்தி, இரவீந்தரநாத் தாகூர், ரமண மகரிஷி, வாட்ஸ் ஆகியோர் அவர்களில் சிலர் ஆவர்.
மகாத்மா காந்தியுடன் குரு மேற்கொண்ட சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது, ஏனெனில் அது காந்தியையும் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களையும் ”தீண்டத்தகாத” சமூகங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தது. கேரளாவில் நிலவிய கடுமையான தீண்டாமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய வைக்கம் சத்தியாகிரகம், ஹரிஜன் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக 1925-ஆம் ஆண்டில் காந்தி கேரளா வந்தபோது அவர்கள் இருவரும் சந்திப்பதற்கு வழிகோலிய முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் மனிதருக்கு ஒரே சாதி, ஒரே சமயம், ஒரே கடவுள், குறிப்பாக ஒரே சாதி, ஒரே சமயம் என்ற குருவின் கூற்றை தொடக்கத்தில் காந்தி ஏற்கவில்லை. ஆயினும் 1937-இல் காந்தி இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார், சாதிய அமைப்புக்கு எதிரான காந்தியின் நிலைப்பாட்டில் குருவின் செல்வாக்கு காணப்படுகிறது.