ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை ஒரு முழு சகாப்தத்தின் வரலாற்றை ஆழமாக வடிவமைத்ததுடன் அதற்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது. அவர் ஒரு தத்துவஞானியாக விளங்கினார், ஒட்டுமொத்தச் சமுதாயத்திலும் சுய விழிப்புணர்வைப் பரப்புவதில் அவர் கணிசமான பங்காற்றினார். அவர் தனது மக்களுக்கு சமூக மேம்பாட்டையும் ஆன்மிக சுதந்திரத்தையும் கொண்டுவருவதற்காகத் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தார்.
குரு, ஓர் ஆன்மிகச் சிந்தனையாளராகவும் கவிஞராகவும் அனைத்து வயதினருக்கும் ஊக்கமளிப்பவராக விளங்கினார். அவரது வாழ்க்கைப் பாதையை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஒருவர் அவருடைய வாழ்க்கையின் தீர்க்கமான திருப்புமுனைச் சம்பவங்களை ஆழ்ந்து ஆராய வேண்டும் – பிறப்பு, சமஸ்கிருத ஆய்வுகள், திருமணம், அவதூத காலம், குரு, மருந்துவாழ்மலை மற்றும் சமயச்சார்பற்ற சந்நியாசம் (சமயச்சார்பற்ற துறவு).
திருவனந்தபுரத்தின் கிழக்குக் கோட்டைக்கு வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்பழந்தி கிராமத்தில் வயல்வாரம் வீட்டில், மாடன் ஆசான் மற்றும் குட்டியம்மாள் தம்பதிக்கு மகனாக ஆகஸ்டு 28, 1856 அன்று ஸ்ரீ நாராயண குரு பிறந்தார். பெற்றோர் இவருக்கு நாராயணன் என்று பெயர் வைத்தாலும், இவரை அனைவரும் செல்லமாக நாணு என்றே அழைத்தனர். கற்றறிந்த, புலமை மிக்க மனிதராகிய அவரது தந்தை, உள்ளூர் மக்களால் ‘குடிப்பள்ளிக்கூடம் ஆசான்’ (உறைவிடப் பள்ளி / குருகுல ஆசிரியர்) என அழைக்கப்பட்டார்.
பல நூற்றாண்டுகள் காலப் பழமையான பாரம்பரியம் கொண்ட மனக்கல் கோயிலும், புகழ்பெற்ற வயல்வாரம் வீடும் அந்தப் பகுதியில் சமய நல்லிணக்கத்தின் போற்றத்தக்க அடையாளங்களாகத் திகழ்ந்தன. திருவிதாங்கூரின் எட்டு அரச குடும்பங்களைச் சேர்ந்த உயர்குடிமக்களில் ஒருவராகிய செம்பழந்திப் பிள்ளையின் உறவினர்களும், வயல்வாரம் குடும்பத்தின் புகழ்பெற்ற உறுப்பினர்களும் மனக்கல் கோயிலின் நிர்வாகத்தில் சம உரிமைகளைக் கொண்டிருந்தனர்.
மற்றவர்களுடன் தொடர்புகொண்ட பிறகு ஏற்படும் தீட்டிலிருந்து புனிதம் பெறுவதற்காகக் குளிக்கும் வழக்கம் அக்காலத்தில் சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு பக்தராக இருந்தபோதும், நாணு அடிக்கடி இந்தச் சடங்கை மீறினார். தியானத்திலும் கோயிலுக்குச் செல்வதிலும் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்ததால், விரைவில் அவர் ‘நாணு பக்தன்’ என்ற பட்டப்பெயரைப் பெற்றார்.