நாராயண குரு எந்தவொரு சமயம், சமூகம் அல்லது நாட்டுக்கும் சொந்தமான குரு அல்ல. அவருக்கு சந்நியாசி (துறவி) சீடர்கள் மற்றும் இல்லற சீடர்கள் உட்பட பல சீடர்கள் உள்ளனர். சீடர்களால் குருவின் எண்ணங்களை உள்வாங்க முடிந்தது, குருவால் சீடர்களின் திறன்களுக்கு உத்வேகமளிக்க முடிந்தது. குருவின் சீடர்களில் பலர் வெவ்வேறு துறைகளில் தங்கள் முத்திரையைப் பதித்து, குருவின் கருத்துகளை நடைமுறைப்படுத்தினர்.
தனது சந்நியாசி சீடர்களைத் தேர்ந்தெடுப்பதில் கூட குரு தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தார். அவரது முக்கியமான சிறப்புமிக்க சீடர்களில், சிவலிங்கதாச சுவாமிகள், பைரவன் சாந்தி, போதானந்த சுவாமிகள், சத்யவிரத சுவாமிகள், ஸ்ரீ நாராயண சைதன்ய சுவாமிகள், சாந்தலிங்க சுவாமிகள், நடராஜ குரு, தர்மதீர்த்தர், நாராயணதீர்த்த சுவாமிகள், எர்னஸ்ட் கிர்க் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
கேரளாவில் மறுமலர்ச்சியின் வரலாற்றை இந்து சமயத்தில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களின் உரிமைக்கான போராட்டங்கள் ஆகியவற்றுடன் மட்டுமே சுருக்கிவிட முடியாது. ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி, வைகுண்ட சுவாமிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். அவர்களால் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி, மனிதர்களின் கண்ணியத்தை ஓரளவுக்கு உயர்த்த முடிந்தது.
நாராயண குருவின் தார்மீகத் தலைமை முன்னணி சமூகச் சீர்திருத்தவாதிகளும் சிந்தனையாளர்களும் போராட்டத்தைத் தொடர்வதற்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. குருவின் கருத்துகளால் உந்தப்பட்ட கொச்சி, மலபார், திருவிதாங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சீடர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வந்தனர். டாக்டர். பல்பூ, டி.கே. மாதவன், சகோதரன் அய்யப்பன், குமாரன் ஆசான், மூலூர் பத்மநாப பணிக்கர், சி. கிருஷ்ணன், மூர்கோத் குமாரன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர்.