தர்க்கத்தில் உறுதியாக வேரூன்றிய ஒரு தத்துவ அமைப்பு அனுபவத்தின் அடிப்படையில் கருத்தாக்கம் செய்யப்படும்போது அது மீவியற்பியலின் ஒரு பகுதியாக ஆகிறது. மீவியற்பியல் என்பது வாழ்க்கை மற்றும் உண்மைப்பொருளைப் பற்றிய விசாரணை ஆகும். உண்மையை எப்பொழுதும் இரண்டு வழிகளில் அணுகலாம். முதலாவது, தொடக்கங்களிலும் முடிவுகளிலும் / வெளிப்படுத்தலிலும் மரபிலும் வேரூன்றியுள்ளது. இரண்டாவது, தர்க்கம் மற்றும் சிந்தனையின் தடையற்ற ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. முந்தையது சமயம் என்றும், பிந்தையது தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியத் தத்துவத்தின் ஒரு சிறப்பம்சம், அது அக உலகுக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகும்.
தரிசனம் அல்லது பார்வை என்பது வாழ்க்கையின் சாராம்சத்தைப் பற்றிய உள்நோக்கு ஆகும். தனிப்பட்ட ஆன்மா தனது அடிப்படை இயல்பை அறிந்துகொள்ள உதவுவதே அதன் செயல்பாடாகும். முக்திக்கான வழிகளைத் தேடுவதைத் தாண்டி, அத்தகைய தத்துவார்த்தப் பார்வைகள் வாழ்க்கையை வடிவமைப்பதில் கணிசமான ஆதிக்கம் செலுத்துவதுடன் செயல்பாட்டுக்கும் வழிகாட்டுகின்றன. மனிதகுலத்திற்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழந்த உள்நோக்கை வழங்கிய, புத்தர், மகாவீரர், கௌதமர், கனடா, கபிலர், பாதராயணர், ஜைமினி, சங்கரர், இராமானுஜர் போன்ற போற்றத்தக்க குருமார்களின் வரிசையில் இணைந்துள்ள மற்றொரு முக்கிய நபர் ஸ்ரீ நாராயண குரு ஆவார்.
அனைத்து தரிசனங்களின் சாராம்சத்தையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய மனிதநேயத் தத்துவத்துக்கு வடிவம் கொடுக்கின்ற நாராயண குருவின் திறன், அவரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது. யோகம், தந்திரம், சைவம் மற்றும் அத்வைதம் ஆகியவை குருவின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய தரிசனங்கள் என்பதை அவரது நூல்களின் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். அவர் ஆன்மிக அமைதியின்றித் தவித்த காலங்களில் யோகத்திலும் தந்திரத்திலும் அவர் பரிசோதனைகளை மேற்கொண்டார். தமிழ் பக்தி இலக்கியம் மூலம் சைவ தரிசனத்தையும், வேதாந்த நூல்கள் மூலம் அத்வைதத்தையும் அவர் புரிந்துகொண்டார். சங்கரரின் அத்வைதத் தத்துவத்தை ஆராய்வதன் மூலமும், குருவின் பார்வையில் இருந்து அது எவ்வாறெல்லாம் வேறுபட்டுள்ளது என்பதை நுணுக்கமாக ஆராய்வதன் மூலமும் குருவின் தத்துவத்தைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
ஆத்மோபதேச சதகம், அத்வைத தீபிகா, பிரம்மவித்யா பஞ்சகம், அறிவு, தெய்வ தசகம், தரிசனமால, வேதாந்த சூத்திரம் போன்ற தனது சொந்தப் படைப்புகள் மூலம் நாராயண குரு தனது தத்துவப் பார்வையை முன்வைத்தார். ஒரு தீவிர இருமையின்மைத் துறவியையும், ஒரு சிறந்த கவிஞரையும் நாராயண குருவிடம் நாம் காண்கிறோம்.
ஸ்ரீ வித்யாதிராஜா சட்டம்பி சுவாமிகளுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்பு, நாராயண குருவின் வாழ்க்கையின் முக்கிய அம்சமாக விளங்கியது. வாமணபுரத்திலும் திருவனந்தபுரத்திலும் சட்டம்பி சுவாமிகளுடன் வசித்தபோது, தைக்காட்டு அய்யாவு சுவாமிகளைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. யோகப் பயிற்சிகளின் மூலம் எண்ணற்ற சித்தி நடைமுறைகளைக் கற்றுத் தேர்ந்திருந்த அய்யாவு சுவாமிகளிடம் இருந்து, குருவால் யோக சாதனங்களைப் பெற முடிந்தது. யோகா என்பது மன ஒருமுகப்படுத்தலின் மூலம் உயர்ந்த மனநிலையை அடைவதற்கான ஒரு பாதை ஆகும். குரு தனது யோக மற்றும் தவ வலிமைகளை சமூக விடுதலைக்காகப் பயன்படுத்தினார்.
தரிசனமாலையில், யோகா என்பதை மனமானது ஆத்மாவுடன் (சுயத்துடன்) ஒன்றிணைவது என வரையறுக்கிறார். யோகா என்பது ஆழமான பழக்கவழக்கங்களை (மறைந்து கிடக்கும் போக்குகளை) வேரறுத்து, உடலின் உள்ளுறுப்புகள் மீது மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஆரம்ப நாள்களில் குரு யோகா பயிற்சி செய்தார் என்றும், அதைத் தெய்வீக உணர்வை அடைவதற்கான ஒரு வழியாகக் கருதினார் என்றும் அவரது துதிப்பாடல்களில் இருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. பிரம்ம வித்யாலயாவின் மாணவர்களுக்காக தரிசனமாலையை குரு இயற்றியபோது அவர் ஒரு முழுமையான கர்ம யோகியாக வாழ்ந்துகொண்டிருந்தார். சுப்பிரமணிய கீர்த்தனம் போன்ற படைப்புகளும் அதே காலகட்டத்தில் இயற்றப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது.