ஸ்ரீ நாராயண குருவின் செயல்பாடுகளில் சமூகச் சீர்திருத்தம் மற்றும் ஆன்மிகத் தலைமை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு தெளிவாகத் தெரிகிறது. அவர் இந்தியக் கோயில் கருத்தாக்கத்துக்குப் புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்த துறவியாக விளங்குகிறார். அவர் நடத்திய கோயில் பிரதிஷ்டைகளும் அதன் மூலம் அவர் முன்வைத்த கருத்துகளும், காலங்காலமாக நிலவி வந்த கோயில்களின் மரபுவழிக் கருத்தாக்கத்துக்குச் சவால் விடும் வகையில் இருந்தன. அருவிப்புரம் சிவன் கோயில் (சிவலிங்க பிரதிஷ்டை), குளத்தூரில் உள்ள கோலத்துகரை கோயில், தலச்சேரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில், கோழிக்கோடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோயில், முறுக்கும்புழாவில் உள்ள ஸ்ரீ காளகண்டேஸ்வரர் கோயில், சிவகிரி சாரதா மடம் (சாரதா பிரதிஷ்டை), கோட்டாரில் உள்ள பிள்ளையார் கணபதி கோயில், திருச்சூரில் உள்ள காரமுக்கு கோயில், களவம்கோடு ஸ்ரீ சக்தீஸ்வரம் கோயில் (கண்ணாடி பிரதிஷ்டை) மற்றும் ஆலுவாவில் உள்ள அத்வைத ஆசிரமம் ஆகியவை ஸ்ரீ நாராயண குருவால் பிரதிஷ்டை நிகழ்த்தப்பட்ட சில முக்கியக் கோயில்கள் ஆகும்.