கல்விக்கான வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூகங்களின் அறியாமையால் அவர்களுடைய புரிதல் மழுங்கடிக்கப்பட்ட நிலையில், அவை எண்ணற்ற இழிவான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாயின. நாராயண குரு பிறந்த ஈழவ சமூகம் இந்த அவல நிலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கியது, அங்கு பின்தங்கிய மக்களின் வாழ்க்கை பெரும்பாலும் அடிமைத்தனத்தை ஒத்திருந்தது. இத்தகைய தவறான நடைமுறைகள் மேலோங்கியிருந்ததை உணர்ந்து ஈழவர்கள் உட்பட இந்தச் சமூகங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் வழங்கியதன் மூலம் ஆழமான சமூக மாற்றத்தைத் தொடங்கிவைத்தார்.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (SNDP), ஸ்ரீ நாராயண தர்ம சங்கம், நாராயண குருகுலம் போன்ற அமைப்புகள் குருவின் நோக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தன. ‘தாலிக்கட்டு கல்யாணம்’ (மாதிரித் திருமணச் சடங்கு), ‘திரண்டு குளி’ (பூப்புனித நீராட்டு விழா), ‘புளிக்குடி’ (சீமந்தம்) போன்றவை அவர் தகர்த்தெறிய உதவிய தீங்கு விளைவிக்கும் சமூக நடைமுறைகளுக்கான சில உதாரணங்கள் ஆகும். மேலும், இந்து சமயத்தில் நிலவிய தீண்டாமையை ஒழிக்கும் நோக்குடன் அவர் வைக்கம் சத்தியாக்கிரகத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.
பல பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் சமூக முன்னேற்றத்துக்குப் பொருந்தாதவை என்றும், முன்னேற்றம் அடைய வேண்டுமெனில் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சமூக உறுப்பினர்களை குரு நம்பவைத்தார். அவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தில் நிலவிய தேக்க நிலையை அவர் அகற்றினார். ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்களைச் சீர்திருத்துவதன் மூலம் மட்டுமே அச் சமூகத்தை மேம்படுத்த முடியும் என்ற உண்மையை அவர் புரிந்துகொண்டார்.
திருமணம் தொடர்பான பல பழக்கவழக்கங்கள் நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. மாதிரித் திருமணச் சடங்காக நடத்தப்படுகின்ற தாலிக்கட்டு கல்யாணம் என்பது அவற்றில் ஒரு சடங்கு ஆகும். இதில் இளம் சிறுமிகளுக்கு அவர்கள் திருமண வயதை அடைவதற்கு முன்பே அடையாளத் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. மக்கள் யானைகள் மற்றும் குதிரைகளின் மீது அழைத்து வரப்பட்டு ஒரு பந்தலில் அமர வைக்கப்பட்டனர். இந்தச் சடங்கின்போது, ஓர் இளம் சிறுமி திருமணத்துக்குத் தகுதியானவராக இருக்கிறார் என்பதைக் குறிப்பதன் அடையாளமாக அவரது கழுத்தில் தாலி (ஒரு சரடு / லாக்கெட்) அணிவிக்கப்படுகிறது. தாலிக்கட்டு கல்யாணத்தைக் கைவிடுமாறு சமூக உறுப்பினர்களை ஊக்குவித்ததன் மூலம், SNDP யோகம் முதலில் இந்தச் சமூகச் சீர்திருத்தத்தைக் கையில் எடுத்தது.
விருந்துகளுக்காகப் பணம் செலவழித்துக்கொண்டும், பகுத்தறிவற்ற பழக்கவழக்கங்களைப் பற்றிக்கொண்டும் இருந்ததன் மூலம் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை மாற்ற முறையான விழிப்புணர்வு அவசியமானதாக இருந்தது. 1904-ஆம் ஆண்டு பரவூரில் (கொல்லம் மாவட்டம்) ஸ்ரீ நாராயண குரு தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், பழக்கவழக்கம் சார்ந்த சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இது தாலிக்கட்டு கல்யாணம் நிறுத்தப்படுவதற்கும், ஒரு புதிய, எளிமையான திருமண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் வழிகோலியது.
குருவின் கோரிக்கையின் பேரில், இந்த வழிகாட்டுதல்களைப் பரப்புவதற்காக அனைத்துத் தாலுகாக்களிலும் பொதுக் கூட்டங்கள் மற்றும் குடும்பக் கூட்டங்களுக்கு யோகம் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தனர். இந்தக் காலகட்டத்தில் குரு, வட திருவிதாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது சீர்திருத்தங்களை உள்ளூர் மக்களிடம் எடுத்துரைத்தார். திருவனந்தபுரம் மாவட்டத்தின் நெய்யாற்றிங்கரை தாலுகாவில் ஒரு பந்தலில் நடைபெற இருந்த மிகவும் ஆடம்பரமான கட்டு கல்யாணத்தை குருவே நேரில் தலையிட்டுத் தடுத்து நிறுத்தினார். திருமணம் என்ற அமைப்பு காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும் என சமூக உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். திருமண விழாக்கள் மிகவும் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்றும், அதில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். இது மற்ற சமூகங்களையும் தங்களுடைய இழிவான பழக்கவழக்கங்களை ஒழிக்கத் தூண்டியது.