சமாதி

தியானம் என்பது அவசியமற்ற எண்ணங்கள் இல்லாத, தொடர்ச்சியான சிந்தனை ஓட்டத்தின் நிலை ஆகும். அதன் உச்சம் சமாதி ஆகும். இது பேரின்பத்தின் உச்ச நிலை ஆகும், இந்த நிலையில் புற உலகத்துடனான அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன. யோகப் பயிற்சியின் இலக்கு இந்த சமாதி நிலையும், அதன் மூலம் அடையப்படும் மோட்சமும் (முக்தி) ஆகும். சமாதி நிலையை அடையும் ஒரு யோகி தன் பிராரப்த கர்மாவை (கடந்தகாலச் செயல்களால் ஏற்படும் ஊழ்வினையை) தீர்த்துக்கொள்கின்றனர். தியானத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீ நாராயண குருவும் சாமதி நிலையை அடைந்தார்.

சுமார் 1927-இல், தனது பூவுலகப் பணி முடியும் தருவாயில் இருப்பதை ஸ்ரீ நாராயண குரு உணர்ந்தார். வயது தொடர்பான தனது நோய்களைப் பற்றி விவாதிக்க அவர் ஒரு சிறிய மருத்துவர் குழுவைக் கூட்டினார். ஆயுர்வேத அறிவியலில் கைதேர்ந்தவராக விளங்கிய குரு, அவர்களுடன் அடிக்கடி ஆழமான விவாதங்களில் ஈடுபட்டார். நோயின் வேதனைகளுக்கு மத்தியிலும் அவரது இயல்பான நகைச்சுவை உணர்வு சற்றும் குறையாமல் இருந்தது. அவர் உடலளவில் மிகவும் பலவீனமாக இருந்தபோதிலும், மற்றவர்களின் உதவியை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். நீதியின் மீது மிகுந்த பற்றுக் கொண்ட அவர், தனது சொத்துகள் மற்றும் பிற விவகாரங்கள் தொடர்பான விவாதங்களில் பங்கேற்று முறையான ஏற்பாடுகள் உன்னிப்பாகச் செய்யப்படுவதை உறுதிசெய்தார்.

ஜனவரி 16, 1928 அன்று, வைக்கம் பேளூர் மடத்துக்குச் செல்வதற்கு முன் கோட்டயத்தில் நடந்த S.N.D.P. கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு அவருக்குச் சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டதால் டாக்டர். நாகோஜி ராவின் கவனிப்பு அவருக்குத் தேவைப்பட்டது. நிபுணர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது, குடலிறக்கத்தால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவருக்குக் கடுமையான சிறுநீரக நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதனால், அவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக அவரை பாலக்காட்டுக்கு மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. பாலக்காட்டில் டாக்டர். கிருஷ்ணனின் மாளிகையில் ஓய்வெடுத்தபோது அவர் ஓரளவு நிவாரணம் பெற்றார். ஆனால் டாக்டர். பண்டாலாவின் ஆலோசனையின் பேரில் அவர் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அவருடன் பல சீடர்கள் சென்றனர். டாக்டர். பண்டாலாவின் மேற்பார்வையின் கீழ் சென்னையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளித்தது. சிறுநீர் அடைப்பு முழுமையாக நீங்கவில்லை என்றாலும் ஓரளவு நிவாரணம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை பெற விரும்புவதாக குரு தெரிவித்தார். 

அவர் பாலக்காடு திரும்பினார். ஒரு வார கால பாரம்பரியச் சிகிச்சைக்குப் பிறகு திருவிதாங்கூர் திரும்ப அவர் முடிவு செய்தார். 1928-இல் வர்கலா வந்த குரு, ஸ்ரீ நாராயண மடத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கி தனது சிகிச்சையைத் தொடர்ந்தார். இந்த ஓய்வுக் காலத்தில், ஆத்மோபதேச சதகத்தின் சில செய்யுள்களுக்கு உரைவிளக்கம் தருமாறு நடராஜ குரு அவரிடம் கேட்டுக்கொண்டார். குரு வாய்மொழியாகப் பதிலளிக்காமல், கேள்வி கேட்டவரின் பக்கமாகத் தனது பார்வையைத் திருப்பி பதிலளித்தார். அந்தத் தருணத்தில் குருவின் முகம் யோக அறிவைப் போதிக்கும் ஆசான்களுக்குரிய ஆழ்ந்த ஆன்மிக ஞானத்தைப் பிரதிபலித்ததாக நடராஜ குரு பதிவு செய்தார். இதற்கிடையில், நடராஜ குரு பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர குரு ஏற்பாடு செய்திருந்தார். குருவின் நோய் சில நாள்களிலேயே தணிந்ததாகத் தோன்றினாலும் அவர் மிகவும் பலவீனமாகவே இருந்தார். இருப்பினும், தன்னுடைய நோயைப் பொருட்படுத்தாமல் குரு தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் கருணையுடன் ஆசி வழங்கினார்.

மற்ற தலைப்புகள்