சிவகிரி யாத்திரை பஞ்சசுத்தியை (ஐந்து மடங்கு தூய்மை) வலியுறுத்தும் பத்து நாள் விரதத்தைக் கட்டாயமாக்குகிறது. ஸ்ரீ நாராயண குருவால் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவரின் சமாதி மற்றும் பிற காரணங்களால் 1929-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதைத் தொடங்க முடியவில்லை. இறுதியில் இது 1933-ஆம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கப்பட்டது, முதலாவது யாத்திரையில் கோட்டயத்தில் இருந்து நான்கு பக்தர்களும், பத்தனம்திட்டாவில் உள்ள ஈழவம்திட்டாவில் இருந்து ஐந்து பக்தர்களும் கலந்துகொண்டனர். அமைதியான தொடக்கம் விரைவிலேயே ஒரு குறிப்பிடத்தக்க இயக்கமாக மாறியது. இன்று, யாத்திரையானது ஆண்டுதோறும் சிவகிரி, வர்கலாவைத் தலைமையிடமாகக் கொண்ட தர்ம சங்க அறக்கட்டளையால் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மூன்று நாள் நிகழ்ச்சியாக இரவு பகலாகத் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
யாத்திரையின் நோக்கங்களை முழுமையாக உணர, பக்தர்கள் பல முக்கியத் துறைகளில் அறிவைப் பெற்று அதைப் பயன்படுத்த வேண்டும், அவையாவன: கல்வி, தூய்மை, கடவுள் பக்தி, அமைப்பு, விவசாயம், வர்த்தகம், கைவினைப் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி. இது மக்களுக்கும் நாட்டுக்கும் செழிப்பைக் கொண்டுவரும் என்று குரு கனவு கண்டார். அறிவின் மூலம் அறிவொளி பெற்றவர்களாகவும், தூய்மையின் மூலம் ஆரோக்கியம் பெற்றவர்களாகவும், அமைப்பின் மூலம் வலிமை பெற்றவர்களாகவும், விவசாயம், கைவினைப் பொருள்கள் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் மூலம் சுயமரியாதை கொண்டவர்களாகவும் விளங்கும் மக்களை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.
யாத்திரையின் தேதிகளையும் வழக்காற்று மரபுகளையும் தேர்ந்தெடுப்பதிலும் கூட குருவின் முற்போக்குச் சிந்தனை அணுகுமுறையைக் காண முடிந்தது. உதாரணமாக, பக்தர்கள் ருத்திராட்சம் அணிய வேண்டுமா எனக் கேட்கப்பட்டபோது, மனிதநேய மற்றும் அறிவியல் ரீதியான பகுத்தறிவுக் காரணங்களை குரு விளக்கினார். வழிபாட்டுக்கு ருத்திராட்சம் அவசியமில்லை என்றும், ஆனால் அதை அரைத்து பச்சைத் தண்ணீருடன் கலந்து உட்கொள்வது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்றும் அவர் கூறினார். ருத்திராட்சத்துக்குப் பதிலாக வெள்ளி அல்லது தங்கம் அணிவது போன்ற தேவையற்ற செலவுகளைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். இது புறச் சடங்குகளின் அர்த்தமின்மையை எடுத்துக்காட்டுகின்ற அதே நேரத்தில் அறிவியல் ரீதியான பகுத்தறிவையும் ஆதரிக்கிறது.
குருவின் செயல்களிலும் வார்த்தைகளிலும் நுட்பமான நகைச்சுவை இழையோடியிருந்தது; அவர் சூழ்நிலைகளுக்கு முனிவரைப் போன்ற நடத்தையுடன் பதிலளித்தார், ஆனாலும் அது கேலியாக இல்லாமல் நகைச்சுவையாக இருந்தது. அவருடைய வார்த்தைகள் வெறுமனே செவிமடுப்பதையும் கடந்து மனித சிந்தனையை மாற்றியமைக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட கருத்துகளின் செயற்களத்துக்குள் நுழைந்தன. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் வலியுறுத்தினார். சமூக மேம்பாட்டுக்கு அவசியமாகத் தேவைப்படும் தலைப்புகளில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்த வேண்டும் என்று குரு வலியுறுத்தினார்: கல்வி, தூய்மை, பக்தி, அமைப்பு, விவசாயம், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி. பகிரப்பட்ட அறிவின் மூலம் தொடர்ந்து முன்னேறும் சமூகத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். ஆரோக்கியமான சமூகத்துக்குத் தூய்மையே அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார்; இந்தக் கொள்கை கோயில்களைக் கட்டுவதில் அவர் செலுத்திய கவனத்தில் தெளிவாகத் தெரிகிறது. மேலும், சுய சார்புக்கும், நிதிப் பாதுகாப்புக்கும் விவசாயம், வர்த்தகம், கைவினைத் தொழில்கள் ஆகியவை முக்கியம் என்பதையும், தேசிய முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பக் கல்வி இன்றியமையாதது என்பதையும் குருஜி புரிந்துகொண்டார்.