தர்மதீர்த்தர் என அழைக்கப்படுகின்ற பரமேஸ்வர மேனன், தன்னுடைய வாழ்க்கையில் பல பின்னடைவுகளை எதிர்கொண்ட பின் துறவறத்தைத் தழுவிய ஒரு நபர் ஆவார். ’தர்ம சங்கம்’ என்ற துறவற அமைப்புக்கான விதிகளைத் தயாரிக்கும் பணியை தர்மதீர்த்தரிடம் குரு நம்பி ஒப்படைத்தார். ஆயினும், தர்மதீர்த்தர் பின்னர் சிவகிரியை விட்டு வெளியேறினார். இந்து சமயத்திலிருந்து கிறிஸ்தவ சமயத்துக்கு மாறிய அவர் தன் பெயரை ஜான் தர்மதீர்த்தர் என மாற்றிக்கொண்டார். கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினாலும் கூட, குருவின் கொள்கைகளை அவர் தொடர்ந்து கடைப்பிடித்தார். குருவின் போதனைகளைப் பரப்புவதற்காக தர்மா என்ற பெயரில் ஒரு பத்திரிகையையும் அவர் தொடங்கினார். அமைதியின் தீர்க்கதரிசி என்ற அவரது நூல் குருவின் போதனைகளுக்கு உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதில் பெரும் பங்காற்றியது.
நாராயணதீர்த்த சுவாமிகள் நாராயண குருவின் தீவிர சீடராக இருந்தார். குருவின் கொள்கைகளைப் பரப்ப அடித்தள நிலையில் உள்ள மக்களுடன் அவர் நெருக்கமாகச் செயல்பட்டார். அவரது முந்தைய பெயர் நாராயண தாஸ். சிவகிரியில் பிரம்மவித்யா மந்திரம் அவருடைய மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்டது.
தலச்சேரியில் பிராமண சமுதாயத்தில் பிறந்த ஆனந்த ஷெனாய், ஆனந்ததீர்த்த சுவாமிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது மாணவப் பருவத்தில், குருவின் போதனைகள் புத்திசாலித்தனமான இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 1928-இல், குரு அவரை சிவகிரியில் ஒரு சன்னியாசியாக நியமித்தார். குரு அவருக்கு ஆனந்ததீர்த்தர் எனப் பெயரிட்டு, ஆசிரமத்தில் உடனுறைபவராக ஏற்றுக்கொண்டார்.
ஆனந்ததீர்த்த சுவாமிகள் ஸ்ரீ நாராயண தர்ம சங்க அறக்கட்டளையின் முதல் தலைவர் ஆனார். பையனூரில் உள்ள பல தலித் சீடர்கள் கல்வி கற்கவும், அரசாங்க வேலைகளில் உயர் பதவிகளைப் பெறவும் அவர் உதவினார். அவர் தன் முழு வாழ்க்கையையும் குருவின் தத்துவத்தைப் பரப்புவதற்காக அர்ப்பணித்த ஒரு சிறந்த சீடர் ஆவார்.
எர்னஸ்ட் கிர்க், இந்தியக் கலாச்சாரத்தின் சாராம்சத்தைத் தேடி இந்தியாவில் உள்ள பல்வேறு ஆன்மிக மையங்களுக்குச் சென்று பார்த்த ஒரு வெளிநாட்டவர் ஆவார். அவர் ஸ்ரீ நாராயண குருவைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். குருவுடன் அவர் தொடர்புகொள்வதற்கு நடராஜ குருவும் தர்மதீர்த்த சுவாமிகளும் உதவினார்கள்.
குருவின் விருப்பங்களின்படி, சிவகிரி இலவச தொழில் மற்றும் வேளாண்மை குருகுலம் என்ற திட்டத்தை சிவகிரி மடத்தின் கீழ் கிர்க் உருவாக்கினார். குருவின் ஆசியுடன் சிவகிரியில் நடைபெற்ற முதல் கலப்புத் திருமணத்திலும் அவர் கலந்துகொண்டார். பிற்காலத்தில், குருவின் சமாதிக்குப் பிறகு சிவகிரியில் இருந்து வெளியேறிய அவர் கோயம்புத்தூரில் ஸ்ரீ நாராயண ஆசிரமத்தைத் தோற்றுவித்தார். லைஃப் என்ற பத்திரிகை மூலம் குருவின் கொள்கைகளை பரந்த மக்களிடம் அவரால் கொண்டுசெல்ல முடிந்தது.