ஐயப்பன் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சிவலிங்கதாச சுவாமிகள், அருவிப்புரத்தில் ஸ்ரீ நாராயண குருவின் ஆரம்பகாலச் சீடர்களில் ஒருவர் ஆவார். அவர் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது ஒரு குகையில் அவர் குருவைச் சந்தித்தார். அவரது சமுதாயத்தினரிடம் இருந்து ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வந்தபோதும் குருவுடனான அவரது பிணைப்பு மேலும் வலுப்பெற்றது. அவர் துறவறம் ஏற்க முடிவு செய்தபோது, பிரம்மவித்யா (பரம்பொருளைப் பற்றிய அறிவு) கற்குமாறு குரு அவருக்கு அறிவுறுத்தினார்.
1888-ஆம் ஆண்டில் அருவிப்புரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை நடந்தபோது அவர் குருவின் நெருங்கிய தோழராக இருந்தார். அப்போது தான் குரு அவருக்கு சிவலிங்கதாச சுவாமிகள் என்ற பெயரைச் சூட்டினார், இதன் பொருள் ‘சிவலிங்கத்தின் சேவகன்’ என்பதாகும். ஆச்சரியம் என்னவென்றால், அருவிப்புரத்தின் 7-வது ஆண்டுவிழாவில் துறவிகள் அனைவருக்கும் காவி நிற ஆடைகள் வழங்கப்பட்ட நிலையில், இவருக்கு மட்டும் சந்நியாசிக்கான வெள்ளை நிற ஆடையை குரு வழங்கினார்.
ஆன்மிகத் தேடல்களுக்கு அப்பாற்பட்டு சிவலிங்கதாச சுவாமிகள் படைப்பாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். ஷாரதாஷ்டகம் மற்றும் குருஷ்டகம் உட்பட சுமார் நாற்பது படைப்புகளை அவர் இயற்றியுள்ளார். குருவின் முனிசர்யபஞ்சகம் மற்றும் ஜனனிநவரத்ன மஞ்சரி ஆகிய நூல்களுக்கு விளக்கவுரைகளையும் எழுதினார். குருவின் போதனைகளை சாமானிய மக்களிடம் பரப்புவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். பெரிங்கோட்டுக்கராவில் உள்ள ஸ்ரீ நாராயணா நிறுவனங்களின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அவரது மறைவின்போது பரன்னுபோயா ஹம்சம் (பறந்து சென்ற அன்னம்) என்ற கவிதையை குமாரன் ஆசான் இயற்றினார்.
நாராயண குருவின் சீடர்களில் பைரவன் சாந்தி தனிச்சிறப்பு மிக்கவர் ஆவார். பிரம்மச்சரியத்தில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், அருவிப்புரம் கோயிலின் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் குருவுக்கான காணிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, குருவின் வாழ்க்கையில் ஒரு நிலையான, விசுவாசமிக்க பக்தராக வாழ்ந்து சேவை செய்தார். பைரவன் சாந்தி தனது 120-வது வயதில் பெரிங்கோட்டுகுராவில் ‘சமாதி’ அடையும் வரை அருவிப்புரத்தில் இருந்தார். அவரது மறைவின்போது பரன்னுபோயா ஹம்சம் (பறந்து சென்ற அன்னம்) என்ற கவிதையை குமாரன் ஆசான் இயற்றினார்.
போதானந்த சுவாமி ஸ்ரீ நாராயண குருவின் முதன்மையான சீடர்களில் ஒருவராக விளங்கினார், பின்னர் அவர் குருவால் தன் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஒரு தீவிர சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார், சாதி முறையை ஒழிப்பதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்வதற்கும் அவர் தயாராக இருந்தார். தீய பழக்கவழக்கங்களையும் வன்முறையையும் வன்முறையாலேயே எதிர்கொள்வது என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. ‘தர்ம படை சங்கம்’ (நீதிப் படை) மற்றும் ‘ரஹஸ்ய சங்கம்’ (இரகசிய சங்கம்) என அழைக்கப்படும் தன்னார்வ இளைஞர் அமைப்புகளை அவர் தொடங்கினார்.
குருவும் போதானந்தரும் முதன்முதலில் தலச்சேரி ஜெகந்நாதர் கோயிலின் பிரதிஷ்டை விழாவின்போது முதன்முதலில் சந்தித்தனர். சிவகிரியில் சாரதா தேவி அறிவின் தெய்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாளில் போதானந்தரைத் தனது சீடராக குரு ஏற்றுக்கொண்டார். துறவறப் பாதையைத் தழுவிய போதானந்தர், சாதிப் பிரச்சனைகளுக்கு எதிராக உறுதியான, தீவிரமான நிலைப்பாட்டை எடுத்தார். உயர் சாதியினரின் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது, சாலையின் இருபுறங்களிலும் வசிக்கும் கீழ் சாதியினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. போதானந்தரின் தலைமையிலான ‘தர்ம படை சங்கம்’ இந்தத் தீய பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெற்றிபெற்றது.
திருச்சூர் அருகே உள்ள தாணிச்சேரி கிராமத்தில், ஒரு முக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த ஈழவ உறுப்பினர் ஒருவர் இறந்தபோது, இறந்தவரின் உடலைத் தகனம் செய்யுமாறு குரு அறிவுறுத்தினார். உயர் சாதி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் கலவரம் வெடித்தது. இருப்பினும், போதானந்தர் தலைமையிலான தர்ம படை சங்கத்தின் வலுவான தலையீட்டால் உயர் சாதியினர் பின்வாங்கினர். இந்தச் சம்பவம் தாணிச்சேரிக் கிளர்ச்சி எனப்பட்டது, இது கேரளாவின் சமூக வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
போதானந்த சுவாமிகள் சமூகத்தின் பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். அவரது முயற்சிகளின் காரணமாக கூர்க்கஞ்சேரியில் S.N.D.P. யோகம் மற்றும் ஈழவ சமாஜம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. ஆலுவா அத்வைத ஆசிரமத்தின் கட்டுமானப் பணியையும் அவர் முன்னின்று நடத்தினார்.