ஸ்ரீ நாராயண குரு

ஸ்ரீ நாராயண குரு நவீன காலத்தில் வாழ்ந்தார். காலத்தின் தேவையை உணர்ந்த அவர், உபநிடதங்களின் மறைபொருளான இரகசியங்களை நவீன அறிவியல் சிந்தனையுடன் இணைத்து தனித்துவமான முறையில் குறிப்பிட்டார். ‘பிரம்மம் சத்யம் ஜகத் மித்யம்’ (பிரம்மனே நிஜம், உலகம் மாயை) போன்ற மந்திரங்கள் பரவலாக ஓதப்பட்டாலும், அவற்றின் ஆழமான சமூக முக்கியத்துவத்தை ஆராய்ந்த முதல் நபர் குரு ஆவார். அவரது தத்துவம் முக்கியமாக அத்வைத வேதாந்தம் தொடர்புடையதாக இருந்தாலும், அவருடைய படைப்புகள் சைவ தரிசனம், சக்தேய தரிசனம் மற்றும் யோக தரிசனம் உள்ளொளியையும் பிரதிபலிக்கின்றன.

முதன்மையான மூலாதார உண்மையை ஆத்மன், பிரம்மன், அறிவு ஆகிய பெயர்களைக் கொண்டு குரு அழைக்கிறார். புராணங்களிலும் இந்து இதிகாசங்களிலும் ஆத்மன் என்பது பாரம்பரியமாக ”வாழ்க்கை” என்பதற்கு ஒத்த சொல்லாகப் பயன்படுத்தப்பட்டாலும், உபநிடதங்கள் இதை சத் (காலம், இடம் அல்லது பொருளால் கட்டுப்படாத உண்மை), சித் (ஒவ்வொரு தனிநபரும் உணர்வுநிலை என்று புரிந்துகொள்ளக்கூடிய தூய அறிவு) மற்றும் ஆனந்தம் (பேரின்பம்) ஆகியவற்றின் கலவையான சச்சிதானந்தம் என்று வரையறுக்கின்றன.

நாராயண குரு ஆத்மாவை இருளுக்குள் தன்னைத் தானே உய்த்தறியும் ஒன்றாகக் கருதினார். பகுத்தறிவின் ஆற்றல் மூலம் வேதாந்தத் தத்துவம் தீவிர நாத்திகர்களைக் கூட உண்மையை நோக்கி வழிநடத்தும் என்று குரு வலியுறுத்தினார். வரலாறு முழுவதும், பரம சத்தியத்தை நோக்கிய பாதை ஒருவருக்குள் பிரகாசிக்கும் உண்மைப்பொருளை உள்நோக்கித் தேடுவதில் அடங்கியுள்ளது என்பதைச் சிந்தனையாளர்கள் பறைசாற்றியுள்ளனர். முழுப் பிரபஞ்சத்தின் அடிப்படை உண்மையை வெளிக்கொணர, ஒவ்வொரு நபருக்குள்ளும் இருக்கும் உண்மையை முதலில் வெளிக்கொணர வேண்டும். அகநோக்கு ஆராய்ச்சியின் முக்கியப் பங்கை உறுதிப்படுத்தும் விதமாக நாராயண குரு இதை, வெளி உலகத்தைக் காணும் கண்களை மறைத்துக்கொண்டு தனது கவனத்தை ஒருவர் உள்மனதை நோக்கித் திருப்பும் செயல் எனத் தெளிவுபடுத்தினார். அவரது ஆய்வு முறை சுயத்தின் உண்மையை நோக்கிய ஓர் அகத்தேடலை உள்ளடக்கியிருந்தது. இது அகம்-புறம் அல்லது மனம்-பருப்பொருள் போன்ற இருமை நிலைகளின் இறுதி நிராகரிப்புக்கு வழிவகுக்கிறது.

அறிவு என்ற தனது சுருக்கமான, தனித்துவமான படைப்பில், தத்துவார்த்த உலகுக்கு மட்டுமல்லாமல் வேதாந்தத்துக்கே செழுமை சேர்க்கும் பங்களிப்பாகிய அத்வைத தரிசனத்தை அறிவின் அறிவியலாக எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாராயண குரு விவரிக்கிறார்.  இங்கு அறிவு என்பது புறப்பொருள்களை உணர்வதிலிருந்து தொடங்கி, புரிதலின் உண்மைப்பொருள் வரை விரிவடைவதாகக் காட்டப்பட்டுள்ளது.

மற்ற தலைப்புகள்