காசர்கோட்டில் கயாக்கிங் மற்றும் கனோயிங் (சிறுபடகோட்டம்) ஆகியவை வேகம் அதிகமின்றி அமைதியாக மேற்கொள்ளப்படுகின்றன. இது தண்ணீரில் வேகமாகச் செல்வதையோ அல்லது எல்லைக்கோடுகளைப் பரிசோதிப்பதையோ நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக இது, இயற்கை நிலத்தோற்றங்கள் பயணத்தின் வேகத்தைத் தீர்மானிக்கின்ற அலையாத்திக் காடுகள் சூழ்ந்த நீர்வழிகள், அமைதியான காயல்கள் ஆகியவற்றின் வழியாக மேற்கொள்ளப்படும். இந்த அனுபவம் மென்மையானதாகவும், உறுதியானதாகவும், இயற்கையோடு ஆழ்ந்து ஒன்றியதாகவும் இருப்பதால் பரபரப்பை விட உற்றுநோக்குதலை விரும்புபவர்களுக்கு இது மிகவும் ஏற்றதாக அமைகிறது.


அலையாத்திக் காடுகள் நிறைந்த சூழல் காசர்கோடு பகுதியைத் தனித்துவமானதாக ஆக்குகிறது. இங்குள்ள நீர்வழித் தடங்கள் பொதுவாகக் குறுகலானதாகவும், பாதுகாப்பானதாகவும், பலத்த காற்றிலிருந்தும் நீரோட்டங்களில் இருந்தும் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளது. நீங்கள் துடுப்பு வலித்து முன்னோக்கிச் செல்லும்போது நீர் அமைதியாக இருக்கின்றது, பெரும்பாலும் அலையாத்தித் தாவரங்களின் வேர்கள், வளைந்து தொங்கும் கிளைகள், மேலேயுள்ள வானம் ஆகியவற்றை ஒரு கண்ணாடி போலத் தன் மேற்பரப்பில் பிரதிபலிக்கிறது. இயக்கம் மிகக் குறைவாகவும், கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருப்பதால் துடுப்புப் போடுபவர்கள் இடைவிடாமல் முயற்சிக்காமலேயே தடங்கலின்றி சறுக்கிச் செல்ல முடிகிறது. இது தியானம் போன்ற ஓர் அனுபவத்தை உருவாக்குகிறது, ஒவ்வொரு துடுப்பு வலித்தலுக்கும் இடையே அமைதி நிலவுகிறது. பறவைகளின் ஒலியாலோ அல்லது கயாக் மீது மோதும்போது நீர் எழுப்பும் மெல்லிய ஓசையாலோ மட்டுமே அந்த அமைதி கலைகிறது.


காசர்கோட்டில் உள்ள கயாக் வழித்தடங்கள் குறிப்பாக இயற்கை ஆர்வலர்களைக் கவர்வதாக உள்ளன. அலையாத்திக் காடுகள் மீன்களுக்கான இனப்பெருக்கத் தலமாகவும், பறவைகள், நண்டுகள், பிற சிறிய வன உயிரிகள் ஆகியவற்றுக்கு வாழிடமாகவும் விளங்குகின்றன. நீருக்கு அருகில் தாழ்வாக அமர்ந்திருக்கும் பறவைகள் அல்லது நீர்ப்பரப்புக்கு அடியில் மீன்கள் நகர்வதால் ஏற்படும் சிற்றலைகள் ஆகிய காட்சிகளை நாம் இங்கு சாதாரணமாகக் காண முடியும். வழித்தடங்கள் மெதுவானதாகவும் தடைகளின்றியும் இருப்பதால், இங்கு கயாக்கிங் செய்வது சுற்றுச்சூழலுக்கு இடையூறு விளைவிப்பதாக இல்லாமல், அதை மதித்து நடப்பது போன்ற உணர்வைத் தருகிறது. இது சூழல் சுற்றுலாவுக்கும், கேரளாவின் கடற்கரைச் சூழலியலை அருகில் இருந்து அனுபவிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த விருப்பத்தேர்வாக அமைகிறது.


இந்தச் செயல்பாடு ஆரம்பநிலையாளர்களுக்கு மிக நன்றாகப் பொருந்துகிறது. இந்தக் காயல்களில் பயன்படுத்துகின்ற கயாக்குகளும் சிறுபடகுகளும் (கனோகளும்) நிலையானதாக உள்ளன, பாதுகாப்பான சூழல் சமநிலையின்மைக்கான ஆபத்தைக் குறைக்கிறது. முதல் முறையாகப் படகு செலுத்துபவர்கள் கூட, தொடங்கிய சில நிமிடங்களிலேயே சௌகரியமாக உணரத் தொடங்குகின்றனர். சிறுபடகுகள் (கனோகள்) பெரும்பாலும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் குடும்பங்களால் அல்லது சிறு குழுக்களால் விரும்பப்படுகின்றன, அதே நேரத்தில் ஒருவர் அல்லது இருவர் செல்லும் கயாக்குகள் தனியாகப் பயணம் செய்பவர்கள் மற்றும் தம்பதியர் இடையே பிரபலமாக உள்ளன. தொழில்நுட்பம் அல்லது உடலுறுதியை விட சீரான இயக்கத்தின் மீதும், விழிப்புணர்வின் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

கயாக்கிங் மற்றும் சிறுபடகோட்ட (கனோயிங்) வழித்தடங்கள் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அலையாத்திப் பாதைகள் மற்றும் காயல் நீர்வழிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கின்றன. இந்த இடங்கள் பொதுவாக பரபரப்பான நகரங்களில் இருந்தும் நெடுஞ்சாலைகளில் இருந்தும் விலகி அமைந்திருப்பதால், நீர்வழித் தடங்களின் அமைதியான தன்மை பாதுகாக்கப்படுகிறது. பொதுவாகச் சாலை வழியாகவே இங்குச் செல்ல முடியும் எனினும், சில வழித்தடங்களில் நீர்நிலைக்கு அருகில் உள்ள சிறிய உட்புறச் சாலைகள் வழியாகப் பயணிக்க வேண்டியிருக்கும். நுழைவுப் பகுதிகள் வழக்கமாக எளிமையானதாகவும் இயல்பானதாகவும், பெரும்பாலும் பெரிய அளவிலான உள்கட்டமைப்புகள் இல்லாததாகவும், இயல்பான, சுற்றுசூழலுக்கு உகந்த அனுபவ உணர்வை வலுப்படுத்துவதாகவும் உள்ளன. நீர் மட்டங்களையும், ஓதங்களின் இயக்கத்தையும், உள்ளூர் நிலைமைகளையும் பொறுத்து சரியான தொடங்கும் இடம் மாறுபடலாம்.

தொலைவு

காசர்கோடு நகரம்: 25–30 கி.மீ.

கண்ணூர் சர்வதேச விமான நிலையம் (மட்டன்னூர்): 70–85 கி.மீ.

வேலை நேரங்கள்

இந்தச் செயல்பாடு பொதுவாக காலை முதல் பிற்பகல் வரை கிடைக்கிறது.

மொத்தக் கால அளவு

இந்த அனுபவம் பொதுவாக சுமார் 1 முதல் 2 மணிநேரம் வரை நீடிக்கிறது.

முன்கூட்டியே முன்பதிவு செய்தல்

வார இறுதி நாட்களிலும், மக்கள் வருகை அதிகமுள்ள நாட்களிலும் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

கடினத்தன்மை நிலை

இந்தச் செயல்பாடு எளிதானதாகவும், பெரும்பாலான பார்வையாளர்களுக்குப் பொருத்தமானதாகவும் உள்ளது.

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

தோராயமான செலவு

ஒரு நபருக்கான கட்டணம் பொதுவாக 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை வேறுபடுகிறது.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

இயற்கையை மிக அருகில் இருந்து புகைப்படம் எடுப்பதற்கு காசர்கோட்டின் அலையாத்தி வழித்தடங்கள் மிகவும் உகந்தவை. அசைவற்ற நீர் தெளிவான பிம்பங்களை உருவாக்குவதால், இது மரங்கள், வேர்கள், வானம் ஆகியவற்றின் சமச்சீர் காட்சிகளைப் படம்பிடிக்க இது மிகவும் உகந்ததாக அமைகிறது. பறவைகளைப் புகைப்படம் எடுக்க அதிகாலை நேரங்கள் மிகவும் உகந்தவை. கேமராக்கள், மொபைல் போன்களை நீர் புகாத பைகளில் எடுத்துச் செல்வது நல்லது. அலையாத்திக் காடுகளிலும், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் ட்ரோன் பயன்பாடு பொதுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, இதைப் பற்றி உங்கள் சுற்றுலா ஏற்பாட்டாளரிடம் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

இந்த அனுபவம் பொதுவாக ஒவ்வொரு பங்கேற்பாளருக்கான கயாக் அல்லது சிறுபடகு, படகுத் துடுப்பு, உயிர்க்காப்பு மேலங்கி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தொடங்குவதற்கு முன், அடிப்படைப் பாதுகாப்பு, துடுப்புப் போடுதல் குறித்த அறிவுறுத்தல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த உபகரணம் ஆரம்பநிலையாளர்களுக்கு ஏற்றதாகவும், நிலைத்தன்மை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில், உள்நுழைதல், வெளியேறுதல், வழித்தட வழிகாட்டுதல் ஆகியவற்றுக்கு உதவ உள்ளூர் வழிகாட்டிகள் அல்லது ஆதரவுப் பணியாளர்கள் காணப்படுவது சுமூகமான, பாதுகாப்பான அனுபவத்தை உறுதிப்படுத்துகின்றது.