கொல்லம் மாவட்டத்தில் மன்றோ தீவில் அமைந்துள்ள மணக்கடவு, கேரளாவில் கயாக்கிங் செய்வதற்கு மிகவும் சாந்தமிக்க, அமைதியான இடங்களில் ஒன்றாகப் பரவலாகக் கருதப்படுகிறது. பிற பரபரப்பான காயல் பகுதிகளைப் போல் அல்லாமல், இந்த இடம் அமைதியான, குழப்பமில்லாத அனுபவத்தை வழங்குவதால் ஓய்வெடுக்க விரும்புவோருக்கு, இயற்கையோடு ஒன்றிணைய விரும்புவோருக்கு அல்லது நிதானமான வேகத்தில் சாகசம் மேற்கொள்ள விரும்புவோருக்கு இது மிகவும் உகந்த இடமாக விளங்குகிறது. செழிப்பான, பசுமையான தென்னந்தோப்புகளுக்கு இடையே மெல்ல வளைந்து செல்லும் ஏராளமான சிறிய நீரோடைகளும், குறுகிய கால்வாய்களும் இப்பகுதியின் சிறப்பம்சங்கள் ஆகும். இங்கு கயாக்கிங் செய்யும்போது சரிவான ஓடு வேய்ந்த கூரைகளைக் கொண்ட, மரத்தாலான பாரம்பரியக் கேரள வீடுகளைக் கடந்து துடுப்புப் படகில் அமைதியாகச் சறுக்கிச் செல்லும்போது, எளிமையான கிராமிய வாழ்க்கை முறைக்குத் திரும்பிச் சென்றது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகின்றது.


மணக்கடவில் உள்ள நீர்வழித் தடங்கள் பொதுவாக அசைவற்றதாக உள்ளன, சில பகுதிகளில் நீரின் ஆழம் குறைவாக இருப்பதால் மென்மையான, எளிதான துடுப்புப் போடும் அனுபவத்தைப் பெற முடிகின்றது. மோட்டார் படகுகளோ அல்லது அதிக இரைச்சலை உண்டாக்கும் போக்குவரத்து வாகனங்களோ இல்லாததால், பனை ஓலைகளின் சலசலப்பு, தொலைவில் கேட்கும் பறவைகளின் ஒலி, கயாக்கின் அடியில் நீரின் மெல்லிய அசைவு என அலையாத்திப் பகுதியின் இயற்கையான ஒலிகளைப் பார்வையாளர்கள் ரசிக்க முடிகிறது. அமைதியான நீர்நிலை, பசுமை, பாரம்பரிய கிராமிய அழகு ஆகியவற்றின் இந்தச் சேர்க்கை மணக்கடவை புகைப்படக் கலைஞர்களையும், இயற்கை ஆர்வலர்களையும் மிகவும் கவர்ந்திழுக்கும் இடமாக ஆக்குகின்றது.


விரைவுத் தகவல்

அமைவிடம், போக்குவரத்து வசதிகள்

மணக்கடவு, தென்னிந்திய மாநிலமாகிய கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தின் ஒரு பகுதியாகிய முன்றோ தீவில் அமைந்துள்ளது. இத் தீவுக்கு கொல்லம் நகரிலிருந்து சாலை மார்க்கமாகவும், காயல் வழித்தடங்களை இணைக்கும் சிறிய உள்ளூர்ப் படகுகள் மூலமாகவும் செல்லலாம். மணக்கடவு செல்வதற்கான பயணம், நெல் வயல்கள், சிறிய கிராமப்புறக் குடியிருப்புகள், தென்னந்தோப்புகள் ஆகியவற்றின் வழியாகச் செல்லும் குறுகிய கிராமச் சாலைகள் வழியாக அமைகிறது, இது கயாக்கிங் சாகசத்துக்கு ஓர் அழகான முன்னோடியாகத் திகழ்கிறது.

தொலைவு

கொல்லம் நகரம்: 24 கி.மீ.

வர்க்கலா: 35 கி.மீ.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம்: 75 கி.மீ.

வேலை நேரங்கள்

இந்தச் செயல்பாட்டை காலை நேரத்தில் சிறப்பாக அனுபவிக்க முடியும்.

மொத்தக் கால அளவு

இந்த அனுபவம் பொதுவாக சுமார் 1 முதல் 3 மணிநேரம் வரை நீடிக்கிறது.

கடினத்தன்மை நிலை

இந்தச் செயல்பாடு எளிதானதாகவும், பெரும்பாலான பார்வையாளர்களுக்குப் பொருத்தமானதாகவும் உள்ளது.

பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரை இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கும்.

கட்டுப்பாடுகள்

பருவகாலத்தைப் பொறுத்து நீர் மட்டங்கள் மாறலாம், இதனால் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படலாம்.

புகைப்படம் மற்றும் ஊடகங்கள்

இயற்கையையும் கிராமப்புற வாழ்க்கையையும் அருகாமையில் இருந்து, நுணுக்கமாகப் புகைப்படம் எடுக்க இந்தச் சூழல் அமைப்பு மிகவும் ஏற்றது.

என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன

குறுகிய கால்வாய்கள், பனை மரங்கள் நிறைந்த நீர்வழிகள், அமைதியான துடுப்புப் படகுச் சவாரிப் பகுதிகள் ஆகியவற்றை நாம் அனுபவிக்க முடியும்.