ஒவ்வொரு துறவியின் வாழ்க்கையிலும் இலக்கின்றி அலைந்து திரியும் காலகட்டம் ஒன்று இருக்கும். ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கையிலும் அவர் மன அமைதியின்றி அலைந்து திரிந்த இந்த அவதூதக் காலம் துல்லியமாகப் பதிவு செய்யப்படவில்லை. குருவின் சீடரான தர்மதீர்த்த சுவாமிகளின் கூற்றுப்படி, அவரது வாழ்க்கையில் இந்தக் காலகட்டம் சுமார் ஆறு ஆண்டுகள் வரை நீடித்தது.
அவதூதக் காலம் என்பது இம்மண்ணுலகத்துடனான அனைத்துப் பந்தங்களையும் துறக்கும் ஒரு நிலை ஆகும். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் தன் ஆடைகளைக் களைந்து வெப்பம், குளிர் மற்றும் அனைத்து மனித உணர்ச்சிகளுக்கும் விருப்பு வெறுப்பு அற்றவராகிறார். ஓர் அவதூதருக்கு நிலையான வசிப்பிடம் கிடையாது. காலியான வீடுகள், மரங்களின் வேர்கள், கோயில்கள், குகைகள், ஓடைகள் அல்லது மலைகளின் குகைகளில் அவர் தஞ்சம் புகலாம். ஒரு அவதூதரின் தனித்துவமான குணம் பரசவ நிலை ஆகும், அது அவருடைய முந்தைய நிலையிலிருந்து அவரை அடையாளம் காண முடியாதபடி மாற்றுகிறது. வாழ்க்கையின் ஆழ்ந்த இரகசியங்களைப் பற்றிய புரிதலே அத்தகைய பரவசநிலையை அடைய உதவுகிறது. தமிழ்நாட்டிலும் கேரளாவின் தெற்கு மாவட்டங்களிலும் அலைந்து திரிந்தபோது குரு பெற்ற அனுபவம் இது.
தனது பயணங்களின்போது, சாலையில் உள்ள ஒரு தமிழ்ப் புத்தகக் கடையில் பல செவ்வியல் தமிழ் நூல்களை குரு கண்டார். திருக்குறள், திருப்பாவை, ஒழிவிலொடுக்கம், திருமந்திரம் போன்ற நூல்கலைப் படிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவர், தமிழில் புலமை பெற்றவராக ஆனார். மொழியின் மீதான இந்த பொறாமைப்படத்தக்க புலமை, அவர் பிற்காலத்தில் சொந்தமாக தமிழ்க் கவிதைகளை இயற்றத் தூண்டியது.
அவதூதராக இருந்த காலத்தில், குரு ஒரே நேரத்தில் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். அவரைப் போற்றியவர்களுக்கு அவர் நாணு சுவாமிகள் ஆனார். சுசீந்தரத்தில் சிலர் குருவை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அவருக்கு மாலை அணிவித்து அவரை வழிபட்டனர். குருவை வழிபட்டவர்களில் பலர் முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்தனர். குரானின் கருத்துகளை சரளமாக விளக்கும் குருவின் திறமையைக் கண்டு முஸ்லிம் அறிஞர்கள் திகைப்படந்தனர். வேறு சிலர் அவரைப் பைத்தியக்காரன் என்று கூறிப் புறக்கணித்தனர். ஆனால் குரு ஒருபோதும் தன் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. அவமானங்களையும் அவமதிப்புகளையும் சமநிலையுடன் எதிர்கொண்டார்.
குரு புதிய அனுபவங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் தேடி தொடர்ந்து அலைந்துகொண்டிருந்தார். அவர் நன்னெறி மதிப்புகளுக்கு முரணாக உள்ள சடங்குகளைக் கவனித்து, அவற்றின் பின்னணியில் உள்ள உந்துசக்திகளைப் பற்றி ஆய்வு செய்தார். குருவின் இந்தப் பயணம் பழக்கப்பட்ட மற்றும் பழக்கமில்லாத இடங்களில் உள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள அவருக்கு உதவியது. துன்பமும் துயரமும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகள் என்ற உண்மையை குரு உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட சமூகங்களுடன் வாழ்வதற்கு அவர் செலவிட்ட காலம் குருவுக்குள் இருந்த கர்ம யோகியைத் தட்டி எழுப்பியதற்குக் காரணமாக இருந்தது.
இந்த ஆண்டுகளில் குரு கீரைகள், கிழங்குகள் மற்றும் பழங்களை உண்டு உயிர் வாழ்ந்தார். ‘கட்டுக்கொடி’ என்ற செடியின் இலைகளைப் பிழிந்து வைத்தால், அது மிக விரைவாக ரொட்டி போலக் கெட்டியாகிவிடும் என்று அவர் தனது சீடர்களிடம் கூறினார். ‘அடபதியன்’ வேர், தேன், தூய நீர் ஆகியவற்றைக் கொண்ட எளிமையான உணவை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ்வதைப் பற்றிய பல அகத்தெளிவுகளை தனது அவதூதக் காலத்தில் குரு பெற்றார். அவர் ஏழைகளுடன் வாழ்ந்தார், அவர்களுடனேயே உணவு உட்கொண்டார், சமூக ஈடுபாட்டுக்கும் தனிமைச் சிந்தனைக்கும் இடையில் தனது நேரத்தைப் பிரித்துக்கொண்டார். சுப்பிரமணிய கீர்த்தனம் என்ற துதிப்பாடல் இந்தக் காலத்தில் இயற்றப்பட்டது.