நாராயண குருவின் படைப்பில் மலையாள உரைநடைப் படைப்புகளும் அடங்கும். சிஜ்ஜடை சிந்தகம், தெய்வ சிந்தனம், கத்ய பிரார்த்தனை, ஆத்மவிலாசம் ஆகியவை அவரது உரைநடைப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
சிஜ்ஜடை சிந்தகம், உணர்வு நிலையை (சித்தி) சடப்பொருளில் இருந்து (ஜடம்) வேறுபடுத்துவதன் மூலம் தொடங்குகிறது. இது ஒரு கடினமான வேலை. நேரடியாக அனுபவித்தால் தவிர இதை மதிநுட்பத்தால் புரிந்துகொள்வது சாத்தியமற்றது. இது பிரபஞ்சத்தின் இறுதிநிலை சாராம்சத்தைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விவரிக்க இயலாதது என குரு குறிப்பிடுகிறார். ஒருவர் அதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால், அறிவு மட்டுமே நிலைத்து நிற்கும்.
இந்தப் படைப்பு 1881-ஆம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என நடராஜ குரு கணித்துள்ளார்..
தெய்வ சிந்தனம் (தெய்வீகச் சிந்தனை) இரண்டு பாகங்களைக் கொண்டது. பாகம் 1-இல், துஷ்ட தெய்வங்கள் இருப்பதாக நம்பி அவற்றை அழிப்பதற்கும், அவை இல்லை என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவற்றை ஒழிப்பதற்கும் இடையே வேறுபாடு இருப்பதாக குரு சுட்டிக்காட்டுகிறார்.
குரு அத்தகையை தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களை ஒழிப்பதன் மூலம் சமூகத்தைச் சீர்திருத்த முயன்றார். தமிழ்நாட்டில், பல துஷ்ட தெய்வங்களை வணங்குவதில் இருந்து மக்களை அவர் தடுத்தார். கோயில் பிரதிஷ்டைகளை மேற்கொண்ட அதே நேரத்தில், மக்கள் விரும்பாத பிரதிஷ்டைகளை அகற்றுவதற்கும் குரு தயங்கியதில்லை. அவரது அனைத்து செயல்களும் மனிதர்களை இருமையற்ற உண்மை குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன.
தெய்வ சிந்தனம் 2-இல், பரம்பொருளுடன் ஒன்றிணைந்த வாழ்க்கைக்கான ஒரு பிரார்த்தனையை குரு முன்வைக்கிறார், இதில் அடிப்படை உடல் செயல்பாடுகள் கூட பக்தியாகவே வழங்கப்படுகின்றன. வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து முக்தி பெறுவதைப் பற்றி மேலும் விரிவாகக் கூறுகின்ற இந்த நூல், அதை மிகவும் உன்னதமான நிலையாகச் சித்தரிக்கிறது.
உரைநடைப் பிரார்த்தனை என்று பொருள்படும் ’கத்ய பிரார்த்தனை’ எனும் நூலில், பரமாத்மாவின் தெய்வீக வடிவத்தைத் தியானிப்பது அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடவுளின் உன்னத நிலையை அடைவதற்கான ஒரு பிரார்த்தனை ஆகும்.
இம்மை வாழ்க்கையில் காணப்படுபவை எதுவும் நிரந்தரமானவை அல்ல என ‘கத்ய பிரார்த்தனை’ குறிப்பிடுகின்றது. இங்குள்ள அனைத்தும் கனவைப் போன்றது; நாம் வெறும் உடல் மட்டுமல்ல, உணர்வும் கொண்டிருக்கிறோம். எனவே பிறப்பு, இறப்பு, ஏழ்மை, நோய், பயம் ஆகியவை உண்மையில் நம்மைத் தீண்ட முடியாது.
குருவின் உரைநடைப் படைப்புகளில் ஆத்மவிலாசம் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது. உபநிடதங்களைப் போலவே இதுவும் ஒரு தெய்வீக வேத நூலாகக் கருதப்படுகிறது. கடவுள் தான் அனைத்து உண்மைப்பொருளின் ஒளிரும் உண்மை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. ‘ஆத்மவிலாசம்’ என்ற வார்த்தை பல்வேறு வடிவங்களில் ஆன்மாவின் வெளிப்பாட்டைக் குறிப்பிடுகிறது.
ஸ்ரீ நாராயண குருவின் உரைநடைப் படைப்புகள் அவரது தனிச்சிறப்பு வாய்ந்த எழுத்துத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றன. அவர் அத்வைதத்தின் ஆழமான தத்துவங்களை மலையாளத்தில் எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார். சிக்கலான கருத்துகளைத் தெளிவுடனும் அழகுடனும் வெளிப்படுத்தும் மொழியின் திறனை முழுமையாக ஆராய்ந்தார்.