
மிதவாதி கிருஷ்ணன் எனப் பிரபலமாக அறியப்பட்ட சி. கிருஷ்ணன், நாராயண குருவின் தத்துவங்களைச் செயல்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பத்திரிகை ஆசிரியரும் சமூகப் பணியாளரும் ஆவார். மிதவாதி என்ற அவருடைய செய்தித்தாள் கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டத்தில் சக்தி வாய்ந்த கருவியாகச் செயல்பட்டது, இது ’கல்வியின் மூலம் உங்களுக்கு நீங்களே விடுதலை அளித்துக்கொள்ளுங்கள்’ என்ற குருவின் தாரக மந்திரத்தால் வழிநடத்தப்பட்டது.
கிருஷ்ணன் சமூகச் சீர்திருத்தத்தைத் தீவிரமாக ஆதரித்தார். கோழிக்கோட்டில் தளி சாலையில், தியா சமுதாயத்தின் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதித்த ‘தீண்டல் பலகையை’ (தீண்டாமைப் பலகை) அகற்றும் முயற்சியில் அவர் முக்கியப் பங்கு வகித்தார். சகோதரன் அய்யப்பனுடன் இணைந்து கொடுங்கலூர் கோயிலில் ‘கோழி வெட்டு’ (கோழி பலியிடுதல்) சடங்கை நிறுத்துவதற்காகப் போராடினார். உயரிய இலட்சியங்கள், சேவை மனப்பான்மை, அசாதாரணமான அறிவுசார் துணிச்சல் ஆகியவற்றுடன் தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருந்த கிருஷ்ணன், தனிப்பட்ட முறையில் சமயச் சடங்குகள் நம்பிக்கையற்றவராக இருந்தாலும் தனது குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருந்தார்.
சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடுவதில் மிகவும் பயனுள்ள கருவியாக செய்தித்தாள் விளங்குவதை உணர்ந்திருந்த அவர், ‘கேரள சஞ்சாரி’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் கோழிக்கோட்டில் ‘பாலபிரபோதினி’ என்ற பெயரில் ஒரு சமஸ்கிருதப் பள்ளியையும் சுயாதீனமாக நடத்திவந்தார். குருவின் நம்பகமான சீடரான சி. கிருஷ்ணன், புத்த மதத்தின் கொள்கைகளைத் தனது வாழ்நாள் சபதமாகக் கருதி புத்த மதத்தைத் தழுவினார்.
ஸ்ரீ நாராயண குருவின் தீவிர சீடராகிய மூர்க்கோத்து குமாரன், குருவின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். குறிப்பாக தலச்சேரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் ஓர் உலோகச் சிலையை நிறுவியதன் மூலம் தனது பக்தியை வெளிப்படுத்தினார். கேரள சஞ்சரி, கேசரி, கேரள சிந்தாமணி, ஆத்மதோஷினி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் ஆரம்பகால மலையாளப் பத்திரிகைத் துறைக்கு அவர் மகத்தான பங்களிப்புகளை வழங்கினார். இது அவருக்கு S.N.D.P. யோகம் மற்றும் குமாரன் ஆசானுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது.
ஆரம்பத்தில் இந்து சமயகுருமார்களிடம் காணப்பட்ட குறைபாடுகளின் காரணமாக பௌத்த சமயத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர், பின்னர் குருவின் அறிவுரைக்குப் பின் இந்து சமயத்தை உறுதியாகப் பின்பற்றினார். குருவின் கொள்கைகளின் மீதான அவரது ஈர்ப்பு அவர் பிரம்மவித்யா சங்கத்தில் இருந்த காலத்தில் தொடங்கியது. வடக்கு மலபாரில் பரவலாகக் காணப்பட்ட தீய பழக்கவழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் குமாரன் தீவிரமாக எதிர்த்தார். ஜெகந்நாதர் கோயிலில் தலித்துகளுக்குக் கோயில் நுழைவு உரிமையைப் பெற்றுத் தருவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
இலக்கியத்தில் தனித்துவமிக்க சிந்தனையாளராக விளங்கிய அவர், குருவின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக வெளியிட்டார். கவிதை, நாடகம், சிறுகதைகள், இலக்கிய விமர்சனம் என அவரது படைப்புத் தளம் பரந்து விரிந்திருந்ததால், இது மலையாளக் கதை இலக்கியத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் அவருக்கு மறுக்க முடியாத ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது. குருவின் போதனைகளைப் கேரளாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பரப்பினார் மூர்க்கோத்து குமாரன் தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்தார்.