
டாக்டர். பல்பூ பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்துக்காக குருவின் கொள்கைகளைப் பயன்படுத்திக்கொண்டார். ஈழவ சாதியில் பிறந்த அவர், தனது சொந்த ஊரில் வேலைவாய்ப்பில் பாகுபாட்டை எதிர்கொண்டதால் மெட்ராஸ் (தற்போதைய சென்னை) மற்றும் மைசூரில் வேலை செய்ய நேர்ந்தது. இந்தப் புறக்கணிப்பு அனுபவம் வழக்கத்துக்கு மாறான சிந்தனையை அவரிடம் தூண்டியது, அவர் தனது பிரச்சனைகளைச் செய்தித்தாள்கள் மூலம் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தொடங்கினார். இந்தத் தனிப்பட்ட போராட்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து மாநில அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தன, பிரிட்டிஷ் தலையீடு ஏற்பட்டுவிடும் என்று அரசு அஞ்சியது.
சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக பல்பூ தீவிரமாகப் பிரச்சாரம் செய்தபோது, அரசாங்க வேலைகள் மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூகங்களுக்காகப் பரிந்துரைத்து 1891-இல் திருவிதாங்கூர் மகாராஜாவிடம் மலையாளி மெமோரியல் சமர்ப்பிக்கப்பட்டது. பல்பூ அதில் மூன்றாவதாகக் கையொப்பம் இட்டிருந்தார். இருந்தபோதிலும், ஈழவர்கள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகத்தினரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் மன தளராத அவர், நேரடியாக திவானைச் சந்தித்துத் தனது கோரிக்கைகளை முன்வைத்தார். அதிகாரிகள் தடையாக இருந்தபோதும் 13,176 பேர் கையொப்பம் இட்ட ஈழவ மெமோரியலை 1896-ஆம் ஆண்டு அவர் ஸ்ரீ மூலம் திருநாளிடம் சமர்ப்பித்தார். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செய்தித்தாள்களில் சாதிய அமைப்பின் அநீதிகளை பல்பூ மிகத் திறமையாக எடுத்துரைத்தார். திவானின் அசைக்க முடியாத நிலைப்பட்டை உணர்ந்த அவர், இட ஒதுக்கீட்டுக்கான வரலாற்றுக் காரணங்களின் தர்க்க ரீதியான விவாதங்களை எடுத்துரைக்கும் ’திருவிதாங்கூரில் திய்யர்கள் நடத்தப்படும் விதம்’ என்ற நூலை எழுதி, அதைக் கேரளா முழுவதும் விநியோகித்ததோடு கேரளாவுக்கு வெளியிலும் விநியோகித்தார்.
அவரது முயற்சிகளைத் தொடரும் விதமாக மெட்ராஸ் ஆளுநருக்கு ஒரு பயனற்ற மனு அனுப்பப்பட்டது. அதன் பொருட்டு, முக்கிய காங்கிரஸ் தலைவரும் நவீன திருவிதாங்கூரின் அரசியல் கிளர்ச்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவருமான பாரிஸ்டர் ஜி.பி. பிள்ளையை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை முன்வைப்பதற்காக இங்கிலாந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது முயற்சிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெர்பர்ட் ராபர்ட்ஸின் தலையீட்டுக்கு வழிகோலின.
பல்பூவின் தொடர்ச்சியான முயற்சிகள் திருவிதாங்கூரில் பல மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக விளங்கின. 1892-இல், சுவாமி விவேகானந்தர் மைசூர் சென்றபோது கேரளாவின் சமூகப் பிரச்சனைகளைப் பற்றி பல்பூ அவரிடம் எடுத்துரைத்தார். இந்தியாவின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் சமயத்தின் கையில் தான் இருக்கின்றது என்பதை வலியுறுத்திய விவேகானந்தர், சமூகப் பாதுகாப்பின்மையைச் சமாளிக்க ஓர் ஆன்மிக குருவைத் தேடுமாறு பரிந்துரைத்தார். பல்பூ இந்த வார்த்தைகளை ஆழமாக உள்வாங்கிக்கொண்டார். மைசூரில் மருத்துவராகப் பணிபுரிந்துகொண்டே அவர் அங்குள்ள பின்தங்கிய சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டார், வாலிகர் சமூகத்துக்காக வாலிகர் சங்கத்தை நிறுவினார். அதன் விதிகள் பிற்காலத்தில் S.N.D.P. யோகம் அமைப்பை உருவாக்குவதற்கு உத்வேகமாக அமைந்தன.
S.N.D.P. இயக்கத்தின் முக்கிய நபராகத் திகழ்ந்த டாக்டர். பல்பூ, ஒடுக்கப்பட்ட கீழ் சாதியினருக்காக அயராது போராடினார். அனைத்து சமூக நோய்களுக்கும் சர்வ நிவாரணி கல்வி என நம்பிய அவர் தொடக்கத்தில் கல்வியின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். இதனால், தீண்டாமை போன்ற சமூகத் தீமைகளை அவர் நேரடியாகக் கையாளவில்லை. ஆயினும், யோகம் அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கியவுடன் பகுத்தறிவற்ற பழக்கவழக்கங்களை ஒழிப்பதற்காக ஒருங்கிணைந்த முயற்சிகள் தொடங்கப்பட்டன.
பிரஜா சபையில் ஈழவர்களை உறுப்பினர்களாக நியமிக்குமாறு திருவிதாங்கூரின் திவான், வி.பி. மாதவ ராவை சம்மதிக்க வைப்பதில் டாக்டர். பல்பூ முக்கியப் பங்காற்றினார். பள்ளிச் சேர்க்கை, அரசாங்க வேலைகளில் பிரதிநிதித்துவம், நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இருந்த உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கிராம சபையை (கிராம அவை) அவர் திறம்படப் பயன்படுத்தினார். சமூகத்தின் நிலையை வலுப்படுத்துவதையும் தாண்டி, சாதாரண மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் குடிசைத் தொழில்கள் முக்கியப் பங்கு வகிப்பதை உணர்ந்த அவர், சமூகத்தின் பொருளாதார நலனை மேம்படுத்துவதற்காக மலபார் பொருளாதார ஒன்றியத்தை நிறுவி அதைச் செயல்படுத்தினார். டாக்டர். பல்பூ ஒரு சாதாரண சீடரை விட மேலானவர்; அவர் சக பயணியாக ஸ்ரீ நாராயண குருவிடமே ஆழந்த தாக்கத்தை ஏற்படுத்தினார்