டி.கே. மாதவன்

டி.கே. மாதவன், ”அமைப்பின் மூலம் வலிமை பெறுங்கள்” என்ற குருவின் போதனையைச் செயல்படுத்துவதற்குத் தலைமை தாங்கிய சீடராக விளங்கினார். ஆலுவாவில் சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்குவதற்கான குருவின் செயல்பாடுகளில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்தச் செயல்பாடுகளின் மூலம் அவர் பெற்ற அனுபவம் தேசாபிமானி என்ற செய்தித்தாளை அவர் தொடங்குவதற்கு வழிகோலியது. தேசாபிமானி மூலம் சமூக சீர்திருத்தத்துக்கான தனது கருத்துகளை அவர் பரப்பினார், சமூக நீதிக்காக அயராது பாடுபட்டார். 

சமுதாயத்தில் டி.கே. மாதவன் முன்வைத்த முக்கியக் கருத்துகளில் ஒன்று குடிமைச் சமத்துவம் ஆகும். பள்ளிகள், பொதுச் சாலைகள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக அவர் இந்த வழிமுறையைப் பின்பற்றினார். டி.கே. மாதவன் தீண்டாமையை ஒழிக்கும் குருவின் பணியை முன்னெடுத்துச் செயல்படுத்தினார். தீண்டாமை ஒழிப்பு என்பதை காங்கிரஸ் கட்சியின் செயல்திட்டத்தின் முதல் அம்சமாகச் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வைக்கம் சத்தியாகிரகத்தின் தலைமைச் சிற்பியாகவும் அவர் விளங்கினார். கேரளாவின் சமூக வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க எதிர்ப்புச் செயலாக விளங்கியது.

1931-இல் நடைபெற்ற குருவாயூர் சத்தியாகிரகம் மற்றும் 1936-இல் நடைபெற்ற திருவிதாங்கூர் கோயில் நுழைவுப் பிரகடனம் ஆகியவையும் டி.கே. மாதவனின் எதிர்ப்புக் கருத்துகளால் எழுச்சியூட்டப்படவை ஆகும். S.N.D.P.-இன் செயலாளர் என்ற முறையில், குருவின் போதனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்பதை ஈழவ சமுதாயத்துக்கு அவர் தொடர்ந்து நினைவுபடுத்தினார். தனது சொல்வன்மையால் கேட்போர் அனைவரையும் வசீகரிக்கும் அசாதாரணத் திறமை அவரிடம் இருந்தது. மகாராஜாவால் வெளியிடப்படும் ஒரு பொதுப் பிரகடனத்தின் மூலம் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என ஸ்ரீ மூலம் பிரஜா சபையின் ஓர் உறுப்பினராக அவர் துணிச்சலாக வாதிட்டார். கோயில்களுக்குள் நுழையும் உரிமையைப் பெறுவதும் தீண்டாமையைப் புறக்கணிப்பதும் தான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான முதல் படி என்பதை அவர் உணர்ந்தார்.

டி.கே. மாதவன் சாதிப்பற்றுள்ளவர் என்பதை விட ஒரு தேசியத் தலைவராகவே செயல்பட்டார். அவரது முயற்சிகள் ஈழவ சமூகத்தை தேசிய நீரோட்டத்துக்குள் கொண்டுவர உதவின. கேரளாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவதில் அவரது செல்வாக்கு முக்கியப் பங்கு வகித்தது. அத்துடன், நாராயண குருவின் மது விலக்கு பற்றிய போதனை, இவரது முயற்சிகளின் காரணமாக தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

மற்ற தலைப்புகள்