அருவிப்புரம் சிவன் கோயில்

இந்தியர்கள் உருவச்சிலைகளை ஆன்மிக அனுபவமும் தெய்வீகப் பிரசன்னமும் இணையும் ஒரு நல்லிணக்கக் கலவையாகக் கருதினர். உருவச்சிலை வழிபாடு என்பது பக்தியின் வெளிப்படையான வடிவம் ஆகும். கேரளாவிலும் அண்டை மாநிலங்களிலும் நிகழ்த்தப்பட்ட கோயில் பிரதிஷ்டைகளை முக்கியமாக இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டத்தில் ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் சிலைகளுக்குப் பிரதிஷ்டை நிகழ்த்தப்பட்டது, அடுத்த கட்டம் குறியீட்டு முறைப் பிரதிஷ்டைகள் ஆகும். முதல் கட்டம் 1888-இல் அருவிப்புரம் பிரதிஷ்டையில் இருந்து தொடங்கியது. இரண்டாவது கட்டம் 1912-இல் சாரதா பிரதிஷ்டையில் இருந்து தொடங்கியது. 1916-இல் நிகழ்த்தப்பட்ட அத்வைத ஆசிரமத்தின் கட்டுமானம் மூன்றாவது கட்டத்துக்கான அடையாளமாக விளங்குகிறது. குருவின் கோயில் பிரதிஷ்டைகள் கோயில் என்ற கருத்தாக்கத்திற்கே புதிய வடிவங்களையும் கண்ணோட்டங்களையும் கொடுத்தது.

குருவின் பிரசன்னம் மூலம், இயற்கை அழகால் செழித்து விளங்கிய அந்த இடம் மெதுவாக பக்தர்களுக்கான புகலிடமாக மாறியது. இது ஒரு வழிபாட்டுத் தலத்தின் அவசியத்தை குரு உணர வழிவகுத்தது. மன அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற, வழிபாட்டுச் சுதந்திரம் அவசியம் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். சாதிய அமைப்பின் ஒரு பகுதியாக இருந்த முக்கியக் கோயில்கள் பெரும்பான்மையான மக்களை விலக்கி வைத்திருந்தாலும், கடவுள் என்ற கருத்துக்கே ஒரு புதிய பரிமாணத்தை வழங்க குரு முயன்றார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் ஆன்மிக அடிமைத்தனத்துக்கு ஒரு தீர்வைக் கண்டறிவதே குருவின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதன் பிறகு, ஆன்மிக அடித்தளத்தின் அடிப்படையில் இதை அடைவதற்கு அவர் முயற்சி மேற்கொண்டார்.

1888-ஆம் ஆண்டில் புனிதமான சிவராத்திரி நாளின் நள்ளிரவில், குரு நெய்யாறு நதியில் நீராடிய பின் சிவலிங்க வடிவிலான ஒரு கல்லுடன் மேலே வந்தார். ஆழ்ந்த தியானத்துக்குப் பிறகு அதிகாலை 3 மணிக்கு அருவிப்புரத்தில் ஒரு தற்காலிகக் கோயிலில் அவர் அந்தச் சிலையை நிறுவினார். அந்த லிங்கத்திற்கு முதல் அபிஷேகம் கண்ணீரால் செய்யப்பட்டது என அவரது சீடரான குமாரன் ஆசான் பிற்காலத்தில் விவரித்துள்ளார்.

தான் மேற்கொண்ட செயலின் புரட்சிகரமான தன்மையை குரு உணர்ந்திருந்தார். கர்மா (செயல்) மூலம் பிராமண நிலையை அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்தார். ஆயினும் அந்த சிவ பிரதிஷ்டை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தர்க்கத்தின் ஆதரவுடன் குரு அவற்றில் பெரும்பாலானவற்றைக் கட்டுப்படுத்த முடிந்தது. தனது செயலைப் பற்றிக் கேள்வி எழுப்பிய மேல்மட்ட சமூகத்துக்கு, ”நாங்கள் எங்கள் சிவனைப் புனிதப்படுத்தியுள்ளோம்” எனப் பதிலளித்தார். குருவில் பதிலில் இருந்த “நாங்கள்” மற்றும் “எங்களுடைய” என்ற வார்த்தைகள் சமத்துவத்தையும் அன்பையும் வலியுறுத்துகின்றன.

சிவ பிரதிஷ்டையின் மீது குரு கொண்டிருந்த விருப்பத்திற்கு, சைவ சமயத்தின் மீது அவருக்கு இருந்த நாட்டமே காரணமாக இருந்தது. அசுரர்களுக்குச் சொந்தமான மூன்று விண்ணுலக நகரங்களையும் (முப்புரம்) எரித்தவர் சிவன். அதேபோல, சாதி மற்றும் சமயம் தொடர்பான அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் குரு முழுமையாக எரித்து ஒழிக்க விரும்பினார். அருவிப்புரத்தில் உள்ள சிலை பிரதிஷ்டை உட்பட, குருவால் செய்யப்பட்ட பெரும்பாலான சிலை பிரதிஷ்டைகள் சிவன், கணபதி, சுப்பிரமணியர் மற்றும் சிவனின் குடும்பத்தைச் சேர்ந்த பிற தெய்வங்களுக்கு உரியவையாக இருந்தன. குருவால் இயற்றப்பட்ட துதிப்பாடல்களில் இருபத்தெட்டுப் பாடல்கள் சிவனுடன் தொடர்புடையவை ஆகும். சிவ பிரதிஷ்டையைத் தொடர்ந்து, முதலில் பக்தர் சிவபெருமானை அடைவார், அதன் பின் ஆன்மிக சக்தி அவரைத் தானாகவே வந்து சேரும் என்று குரு கூறினார்.

மற்ற தலைப்புகள்