திருவனந்தபுரம் மாவட்டத்தின் குளத்தூரில் அமைந்துள்ள கோலத்துகரை கோயில் நாராயண குருவால் மறுபிரதிஷ்டை செய்யப்பட்ட காரணத்தால் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு ஒரு சிவன் கோயிலை நிறுவ வேண்டும் என்பது உள்ளூர் மக்களின் மனதில் சுடர்விட்டு எரியும் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க அருவிப்புரம் பிரதிஷ்டையைத் தொடர்ந்து, கோலத்துகரையை நோக்கி குரு தனது பயணத்தைத் தொடங்கினார். மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர் அங்கு இருந்த பழைய, சிதிலமடைந்த தேவி கோயிலை இடித்துத்தள்ளும் பணியைத் தொடங்கினார். அந்த இடத்தில் அவர் புதிதாக ஒரு கோயிலைக் கட்டி சிவனைப் பிரதிஷ்டை செய்தார். இந்தச் செயல் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றது. அதுவரை உயர் சாதியினருக்குச் சொந்தமான திரிப்பப்பூர் கோயிலையே சார்ந்திருந்த கீழ் சாதி மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. அங்கு சுதந்திரமாக வழிபடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
பழைய கோலத்துகரைக் கோயிலில் பாடுதல் மற்றும் தூக்கம் (கொக்கி ஊஞ்சல்) ஆகியவற்றுடன், விலங்கு பலியும் இறைச்சி, மீன், மதுபானம் ஆகியவற்றைப் படையலிடுவதும் தவறாமல் நடத்தப்பட்டன. குருவின் மறுபிரதிஷ்டைக்குப் பிறகு, இங்கு விலங்கு பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்கு பலியைத் தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்தத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலின் பிரதிஷ்டை விழாவின்போது கோலதீரேசஸ்தவம் என்ற கவிதையை இயற்றினார்.
ஜெகந்நாதர் கோயில் கண்ணூர் மாவட்டத்தின் தலச்சேரியில் அமைந்துள்ளது. குரு 1908-ஆம் ஆண்டில் இந்தக் கோயிலை நிறுவி பிரதிஷ்டை மேற்கொண்டார். ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலின் நினைவாக இந்தக் கோயிலுக்கு இப் பெயர் சூட்டப்பட்டது. சாதியச் சிந்தனைகளால் தூண்டப்படாத ஒரு முன்மாதிரி ஆலயமாக இது கருதப்படுகிறது. இளநீராட்டம் (இளநீர் அபிஷேகம்) எனும் சடங்கு இங்கு புகழ்பெற்றது. அப்போது பல பேர் இளநீர் நிரம்பிய பானைகளைச் சுமந்துகொண்டு, ‘ஓம்’ எனும் மந்திரத்தை உச்சரித்தவாறே கோயிலுக்குச் செல்வது இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஆகும். பின்னர் அந்தச் சிலை இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தச் சடங்கு இடவம் என்ற மலையாள மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம்.
இளநீராட்டம் சடங்கின்போது திரட்டப்படும் பணத்தை ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும், தொழில் பயிற்சிக்காகவும் பயன்படுத்துமாறு குரு உத்தரவிட்டார். 1912-இல், கோயிலில் இருந்து வரும் வருமானத்தில் பாதித் தொகை ஆலுவா நகரில் அத்வைத ஆசிரமம் கட்டுவதற்கான நிலம் வாங்குவதற்காக குருவிடம் வழங்கப்பட்டது. 1927-இல், குரு உயிருடன் இருந்தபோதே, புகழ்பெற்ற எழுத்தாளரும் குருவின் பக்தருமான மூர்க்கோத்து குமாரன் கோயிலின் வடக்குத் திசையில் குருவின் பஞ்சலோக (ஐந்து உலோகங்கள்) சிலையை நிறுவுவதற்கு முன்முயற்சி எடுத்தார். அந்தச் சிலையை போதானந்த சுவாமிகள் திறந்து வைத்தார்.